முதலமைச்சரின் ஊட்டம் தரும் காய்கறி தோட்ட திட்டத்தில் மானியத்தில் கிடைக்கிறது மாடித்தோட்ட ‘கிட்’

*மதுரையில் பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்கள் வரவேற்பு

மதுரை : முதலமைச்சரின் ஊட்டச்சத்து தரும் காய்கறி தோட்ட திட்டத்தின் கீழ் மாடித்தோட்டம் அமைப்பதற்கான ரூ.900 மதிப்புள்ள கிட், 50 சதவீத மானியத்தில் ரூ.450க்கு தோட்டக்கலை மூலம் தமிழக அரசு வழங்கி வருகிறது. மதுரையில் இத்திட்டத்திற்கு பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்களிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.மதுரை மாவட்டத்தின் நகர், புறநகர் பகுதிகளில் மாடித்தோட்டம் அமைத்து இயற்கையான முறையில் விளைவித்த காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவைகளை அறுவடை செய்வதில் பொதுமக்களிடம் ஆர்வம் அதிகரித்துள்ளது. தங்கள் வீட்டிற்கு தேவையான காய்கறிகளை தாங்களே விளைவித்து, உண்பதில் கிடைக்கும் ஆனந்தம் அலாதியானது.

இதற்கென தமிழக அரசு சார்பில் முதலமைச்சரின் ஊட்டச்சத்து தரும் காய்கறி தோட்டம் திட்டத்தில் வழங்கும் ஒரு கிட்டில் செடி வளர்க்கும் 6 வளர் பைகள், 6 கிலோ தென்னை நார்கழிவு கட்டிகள், 6 வகையான காய்கறி விதைகள், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைகோடெர்மா விரிடி போன்ற இயற்கை இடுபொருட்களுடன், வேப்ப எண்ணெய், மாடித்தோட்ட காய்கறி வளர்ப்பு முறைக்கான கையேடு ஆகியவையும் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் பொதுமக்கள், இயற்கை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

நஞ்சில்லா பொருளை நாமே அறுவடை செய்யலாம்வீட்டில் நாம் சாப்பிடும் காய்றிகள், பழங்கள் கீரைகள் எல்லாம் பெரும்பான்மை கடைகளில் இருந்தே வாங்கி பயன்படுத்துகிறோம். இவைகளில் ரசாயன உரங்கள் அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில் தற்போது இயற்கை மீதான விழிப்புணர்வு பொதுமக்களிடையே அதிகரித்திருப்பதால் இந்த மாடித்தோட்டம் அமைப்பதன் மீது ஆர்வத்தை தந்திருக்கிறது.

மாடித்தோட்டம் மற்றும் வீட்டுத்தோட்டம் என்பது இயற்கை உரம், இயற்கை நுண்ணுயிர் உரம், இயற்கை பூச்சிக்கொல்லி ஆகியவற்றின் மூலம் வீட்டின் மாடி மற்றும் வீட்டை சுற்றி உள்ள பயன்படுத்தப்படாத பகுதிகளில் காய்கறிகள், பழங்கள், மூலிகை பயிர்களை நட்டு, நஞ்சில்லா மற்றும் சத்தான உணவு பொருட்களை நாமே அறுவடை செய்து பயன்படுத்துவது ஆகும். நாளுக்கு நாள் காய்கறிகளின் விலை ஏற்றத்தினால் மாடித்தோட்டம் மூலம் அந்த செலவை குறைக்கலாம். நம் உடலுக்கு தேவையான சத்துக்களை மாடித்தோட்ட காய்கறிகள், பழங்கள் மூலிகை பயிர்கள் கொடுக்கிறது. மேலும் மாடித்தோட்ட பராமரித்தல் என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்களுக்கு ஒரு நல்ல உடற்பயிற்சியாகவும் அமைகிறது.

‘வீட்டின் மருத்துவர்’ மாடி தோட்டம்

இதுகுறித்து மதுரை வேளாண் அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமசுப்பிரமணியன், தொழில் நுட்ப வல்லுநர் பழனிகுமார் கூறியதாவது: முதல் முறை மாடித்தோட்டம் அமைப்பவர்கள் தக்காளி, கத்தரிக்காய் போன்ற காய்கறி சாகுபடியில் இறங்க வேண்டாம். இவற்றில் பூச்சி, நோய் தாக்குதல் அதிகமாக இருக்கும். எனவே ஆரம்பத்தில் இவற்றை பயிரிடுவதற்கு பதிலாக கொடி, கீரை மற்றும் மூலிகை வகைகளாக, குறுகிய காலத்தில் அறுவடை செய்யக்கூடியவற்றை நடவு செய்யலாம்.

கீரை வகைகளை 25 நாட்களில் முழுவதுமாக அறுவடை செய்து விடலாம். இவற்றில் பூச்சி தாக்குதல் அதிகமிருக்காது. எனவே இவற்றை ஆரம்பமாக பயிரிடலாம். இவ்வகையில் பொன்னாங்கண்ணி, தவசிக்கீரை, அகத்தி கீரை, சிறுகீரை, தண்டுகீரை, பலக்கீரை, கொத்தமல்லி, வெந்தயக்கீரை, மணத்தக்காளி போன்ற கீரை வகைகள் வளர்க்கலாம். மாடித்தோட்டத்தில் புடலை, பாகற்காய், சுரைக்காய், பீர்க்கங்காய், பூசணி, வெள்ளரி போன்ற கொடி வகைகள் வளர்க்கலாம். மாடித்தோட்டத்தில் வளர்க்கம் மூலிகை பயிர்கள் நம் வீட்டின் மருத்துவராக செயல்படும். சோற்று கற்றாழை உடல் வெப்பம் அகற்றி, சருமத்தை பாதுகாக்கிறது, துளசி காய்ச்சல், சளியை நீக்குகிறது.

இன்சுலின் நீரழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. நிலவேம்பு விஷக்கடி, காய்ச்சல், நீரிழிவு பாதிப்புகளை கட்டுப்படுத்துகிறது. தூதுவளை, ஆடாதோடை போன்றவை சளி, இருமல் இளப்பை கட்டுப்படுத்துகிறது. வல்லாரை ஞாபகசக்தியை அதிகரிக்கிறது. பிரண்டை பசியை தூண்டுகிறது.

முள் சீத்தா புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது. கரிசிலாங்கண்ணி மஞ்சள் காமாலையை குணப்படுத்துகிறது. வசம்பு குழந்தைகளுக்கு ஏற்படும் அஜீரணம், வயிற்றுப்போக்கினை குணப்படுத்தி பசியை துண்டி ஞாபகசக்தியை அதிகப்படுத்துகிறது. இவற்றை எல்லாம் பராமரிக்க தினமும் 30 நிமிடம், வார இறுதியில் ஒரு மணிநேரம் செலவு செய்தாலே போதும் நிச்சயமாக நல்ல விளைச்சல் பார்க்கலாம்’ என்றார்.

அரசின் கிட் அற்புதம்

மாடித்தோட்ட ஆர்வலர்கள் கூறும்போது, ‘ஒரு கிட் ரூ.450 என ஒவ்வொருவரும் இரு கிட் வாங்கிக் கொள்ளலாம். ஆதார் அடையாள அட்டையுடன், ஒரு போட்டோவும் சேர்த்து பதிவு செய்து வைத்தால், தோட்டக்கலை துறையில் இருந்து அழைப்பு விடுத்து இந்த கிட் வழங்குவர். ஒவ்வொருவரும் பெரும் விவசாயியாக ஜொலிப்பதற்கான ஒரு வாசலாக இந்த மாடித்தோட்டம் வளர்ப்பு கிட் அமைகிறது. அரசு வழங்கும் இந்த கிட் மிகுந்த பயனளிக்கிறது’ என்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.