ஹாலிவுட்டில் மிகவும் பிரபலமானவர் நடிகர் டாம் க்ரூஸ். 60 வயதானவர், இன்னமும் கிராபிக்ஸ் உதவி இல்லாமல் ரியல் விமானத்தில் தொங்குவது போன்ற ஸ்டன்ட் காட்சிகளில் நடித்து அசத்தி வருகிறார். இவர் கடந்த 2020-ம் ஆண்டே விண்வெளியில் தன் பட ஷூட்டிங்கை நடத்திக் காட்டப்போவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவுடன் இணைந்து அறிவித்து இருந்தார். ஆனால், கொரோனா தொற்றுக் காரணமாக அவரது ஆசை நிறைவேறாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது தனியார் ஊடகம் ஒன்றிற்குப் பேட்டியளித்த யுனிவர்சல் ஸ்டுடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் தலைவர் டேம் டோன்னா லேங்க்லி (Dame Donna Langley) நடிகர் டாம் க்ரூஸை வைத்து விண்வெளியில் படப்பிடிப்பை நடத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், “டாம் குரூஸ் நம்மை விண்வெளிக்கு அழைத்துச் செல்லவிருக்கிறார். ஆம், இந்த உலகையே விண்வெளிக்கு அழைத்துச் செல்லவிருக்கிறார். அதுதான் அவரின் திட்டம். நாங்கள் டாமுடன் இணைந்து சிறப்பான திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளோம். இந்தத் திட்டத்தின் படி ராக்கெட் ஒன்றின் மூலம் ஸ்பேஸ் ஸ்டேஷனுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளோம். இதன் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் நடைப்பயணம் மேற்கொண்ட முதல் குடிமகன் என்ற பெருமையை அவர் பெறுவார் என்று டோன்னா தெரிவித்திருக்கிறார்.
இந்தப் படத்துக்கு இன்னமும் பெயர் சூட்டப்படவில்லை. படத்துக்கான பட்ஜெட் 200 மில்லியன் டாலர்கள் என்றும், டாம் க்ரூஸின் சம்பளம் மட்டும் 30 – 60 மில்லியன் டாலர்கள் வரை செல்லும் என்கிறார்கள்.