சேலம் மாவட்டத்தில் 5 லட்சம் மதிப்பிலான குட்கா மற்றும் புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி மூலப்பிள்ளையார் கோவில் அருகே தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து கடைகளில் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
இந்த தகவலையடுத்து அன்னதானப்பட்டி போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அன்பழகன் என்பவருக்கு சொந்தமான குடோனை வாடகைக்கு எடுத்து குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குடோனில் சோதனை நடத்தி 5 லட்சம் மதிப்பிலான 30 மூட்டைகளிலிருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் விற்பனைக்காக பயன்படுத்தி வந்த கார் மற்றும் இரு சக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.
இதைத்தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து செவ்வாய்பேட்டை பகுதியை சேர்ந்த ஒரு சிறுவன் உட்பட ஹிதீஷ்குமார்(39), சரவணக்குமார் (28) வரஜிங்ராம் (24), மற்றும் குடோன் உரிமையாளர் அன்பழகன் (31) ஆகிய 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.