75 டன் எடையில் டீசலில் இயங்கும் நீராவி இன்ஜின் – நீலகிரிக்கு மாஸ் என்ட்ரி கொடுத்த பொன்மலை ரயில்!

யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரிய அந்தஸ்தைப் பெற்றிருக்கும் நீலகிரி மலை ரயில் நூற்றாண்டுகளைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. ஆசியாவின் மிக நீண்ட பற்சக்கர தண்டவாள அமைப்பைக் கொண்டுள்ள இந்த மலை ரயில் பாதையில் மேட்டுப்பாளையம் முதல் குன்னூர் வரை நீராவி ரயில் இன்ஜினைப் பயன்படுத்திவருகின்றனர். இயற்கை எழில் கொஞ்சும் மலைத்தொடரில் தடதடக்கும் இந்த நீலகிரி மலை ரயிலில் பயணிக்க இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் காத்துக்கிடக்கின்றனர்.

நீராவி ரயில் இன்ஜின்

ஆங்கிலேயர் ஆட்சியின் போது சுவிட்சர்லாந்தில் இருந்து நீராவி ரயில் இன்ஜின்களை வரவழைத்து நீலகிரியில் இயக்கி வந்தனர். பழைமை மாறாமல் இன்றளவும் நீராவி மூலமே மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. ஆனால், நிலக்கரிக்கு மாற்றாக பர்னஸ் ஆயில் மற்றும் டீசலை எரிபொருளாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நீலகிரி மலை ரயிலை இயக்க திருச்சி பொன்மலை ரயில் பணிமனையில் முதல் முறையாக டீசலை எரிபொருளாகக் கொண்டு இயங்கும் நீராவி ரயில் இன்ஜினை வடிவமைத்து அசத்தியுள்ளனர். நூற்றுக்கணக்கான ரயில்வே பணியாளர்களின் பல மாத உழைப்பில் உருவான இந்த மலை ரயில் இன்ஜின் சுவிட்சர்லாந்தில் வடிவமைக்கப்பட்ட நீராவி இன்ஜின் போலவே இருப்பதுதான் தனிச் சிறப்பு. சுமார் 75 டன் எடையுள்ள இந்த ரயில் இன்ஜின் ஒரு மணி நேரத்திற்கு 600 லிட்டர் டீசல் மூலம் இயங்கும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

நீராவி ரயில் என்ஜின்

திருச்சி, பொன்மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்தப் புதிய மலை ரயில் இன்ஜின் சோதனை ஓட்டம் நடைபெற்று வந்தது. பற்சக்கர தண்டவாளத்தில் சிறப்பாக ஓடிய இந்த நீராவி ரயில் இன்ஜின் முதல் முறையாகக் குன்னூர் ரயில் நிலையம் வந்தடைந்தது.

சோதனை ஓட்டமாகப் புதிய ரயில் இன்ஜினை இயக்கி வரும் ரயில்வே பணியாளர்கள் நம்மிடம் பேசுகையில், “சுமார் 12 மீட்டர் நீளம், 3 மீட்டர் உயரம் கொண்ட இந்த இன்ஜின் டீசலில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிலக்கரி, பர்னஸ் ஆயில் மூலம் இயங்கும் நீராவி இன்ஜின்களைப் பொன்மலைப் பணிமனையில் உருவாக்கியிருந்தாலும், இது டீசல் மூலம் இயங்கும் முதல் நீராவி இன்ஜின் என்பது குறிப்பிடத்தக்கது.

நீராவி ரயில் இன்ஜின்

4 முதல் 5 டன் நீராவியை உற்பத்தி செய்யும் வகையில் நீராவி அடுப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜினைத் தயாரிக்க 9 கோடி ரூபாய்க்கு மேல் செலவு ஆகியுள்ளது. இன்னும் சில நாள்களுக்கு சோதனை ஓட்டம் தொடர்ந்து நடைபெறும்” என்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.