IND vs SA: குல்தீப்பின் மேஜிக்கால் பரிதாபமாக வீழ்ந்த தென்னாப்பிரிக்கா; தொடரை வென்ற இந்தியா!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையே தொடரின் முடிவைத் தீர்மானிக்கும் இறுதி ஒரு நாள் போட்டி டெல்லியில் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரையும் வென்றிருக்கிறது.

தென்னாப்பிரிக்க அணிக்கு டேவிட் மில்லர் கேப்டன் பொறுப்பை ஏற்றிருந்தார். டாஸ் வென்ற இந்திய அணி பௌலிங் செய்யத் தீர்மானித்தது.

பிட்ச்சில் ஈரப்பதம் இருப்பதாகச் சொல்லி அதனை தாங்கள் உபயோகித்து கொள்ள வேண்டும் என்று கூறினார் தவான். பிட்ச்சில் சில இடங்களில் புற்கள் வளர்ந்து காணப்பட்டதால் பந்து ஸ்விங் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அங்கு நடந்ததோ வேறு. எதிர்பாராத விதத்தில் இந்திய அணியின் ஸ்பின்னர்கள் ஆட்டத்தை இந்தியா பக்கம் சாய்த்தனர்.

IND vs SA

டி காக்கை சுந்தர் வெளியேற்றினார். ரீஸா ஹென்றிக்ஸ் மற்றும் யானமென் மலான் சிறிது நேரம் தாக்குப்பிடித்தாலும் அவர்களைத் தனது ஷார்ட் பிட்ச் பந்துகள் மூலம் பெவிலியனுக்கு அனுப்பினார் சிராஜ்.

அடுத்து வந்த அனைத்து பேட்டர்களும் ஸ்பின்னர்களிடம் தங்கள் விக்கெட்டை இழந்தனர்.

இவற்றுக்கு மத்தியில் தென்னாப்பிரிக்க அணிக்கு ஆறுதலான ஒரு விஷயம் க்ளாஸனின் ஆட்டம்தான். இந்திய ஸ்பின்னர்களை இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக கையாண்ட பேட்ஸ்மேன் க்ளாஸன் மட்டும்தான். அடுத்த வருடம் உலகக்கோப்பை பிளேயிங் லெவனில் தான் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதை தனது பேட்டிங் பெர்மான்ஸ் மூலம் நிரூபித்துள்ளார்.

யான்சென் இறுதியில் சில பவுண்டரிகள் அடித்தாலும் தென்னாப்பிரிக்க அணி வெறும் 99 ரன்களுக்கு சுருண்டது. இந்திய தரப்பில் குல்தீப் 4 விக்கெட்டுகளும், வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் அகமது மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.

Kuldeep Yadav | குல்தீப் யாதவ்

100 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் தவான் ஆரம்பத்திலேயே ரன் அவுட் ஆனாலும் கில் தனது டிரைவுகளால் இந்திய அணி வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார். 49 ரன்களில் ஆட்டமிழந்தார் கில். தவறு செய்தால் அதைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்பது போல சென்ற ஆட்டத்தில் ஷ்ரேயாஸ் ஐயருக்கு வீசாமல் இருந்த ஷார்ட் பிட்ச் பந்தை இந்த ஆட்டத்தில் வீசினார் நார்க்கியா. ஆனால், அது கிட்டத்தட்ட மட்டுமே விக்கெட்டாக மாறியது.

எது எப்படியோ, இறுதியில் சிக்ஸர் அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார் ஷ்ரேயாஸ் ஐயர். 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியது இந்திய அணி.

இந்தத் தொடர் முழுவதும் சேர்த்து தவான் (8 சராசரி) மற்றும் டி காக் (19 சராசரி) இருவரும் 100 ரன்களைக்கூட எட்டவில்லை. இது அந்த இரு அணிகளுக்கும் பெரிய ஏமாற்றம்தான்.

IND vs SA

இந்தத் தொடரில் தென்னாப்பிரிக்க அணி மூன்று போட்டிகளிலும் வெவ்வேறு கேப்டன்கள், விதவிதமான டீம் காம்பினேஷன்களை முயற்சி செய்துள்ளது. ஆனால், அவை எந்தவொரு பலனையும் தரவில்லை. ஸ்பின்னர்களை ஆடத் தெரிந்தால் மட்டுமே இந்திய ஆடுகளங்களில் தாக்குப்பிடிக்க முடியும் என்பதை இந்தப் போட்டி தென்னாப்பிரிக்க அணிக்கு உணர்த்தியிருக்க கூடும்.

கூடுதல் சோகமாக, இந்த தோல்வி மூலம் தென்னாப்பிரிக்க அணி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்றில் ஆட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 1992 முதல் அனைத்து உலகக்கோப்பைகளிலும் தவறாமல் இடம்பிடித்த அணி தென்னாப்பிரிக்கா, அதனை இம்முறை தவற விடாமல் இருக்க தகுதிச்சுற்றில் வென்றாக வேண்டும்.

இந்திய அணியில் சிராஜிடம் இருந்து இத்தகைய பெர்பார்மன்ஸ் யாரும் எதிர்பாராத ஒன்று. புது பந்தில் அவரின் ஸ்விங் மற்றும் பவுன்சர்கள் பெரிதும் உதவுகின்றன. தொடர் நாயகன் விருதையும் அவரே வென்றார். இன்னும் ஷமி ஆஸ்திரேலியா செல்லாத நிலையில் ஒருவேளை அவர் பிட்டாக இல்லாமல் இருந்தால் அந்த வாய்ப்பு சிராஜ் பக்கம் திரும்பலாம்.

IND vs SA

அடுத்த வருடம் உலகக்கோப்பையில் கொஞ்சம் ஸ்பின்னர்களுக்கு உதவும் வகையில் பிட்ச்கள் அமைந்தால் குல்தீப் – சஹால் இணை அதனை உபயோகித்து எளிதில் வெற்றிகளைப் பெறலாம். மேலும் உள்ளூர் அணி என்னும் அந்தஸ்துடன் களமிறங்கும் இந்திய அணி கோப்பையை வெல்லும் எனவும் நம்பலாம்!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.