பாலிவுட் நடிகர் அமீர் கான் சமீபத்தில் வங்கி விளம்பரம் ஒன்றில் நடித்திருந்தார். அந்த விளம்பரத்தில் அமீர் கான், கியாரா அத்வானி ஆகியோர் நடித்திருந்தனர். அந்த விளம்பரத்தில், திருமணம் முடித்த தம்பதிகள் சிரித்துக்கொண்டே மணமகளின் வீட்டை அடைந்து, மணமகன் மணமகள் வீட்டில் முதல் அடி எடுத்து வைப்பதாக விளம்பரம் நகர்கிறது. இந்த நிலையில், விளம்பரம் பாரம்பர்யத்தை மீறுவதாகவும், இந்துக்களின் மனதை புண்படுத்துவதாகவும் மத்தியப் பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற மகாகாலேஷ்வர் கோயிலின் பூசாரிகள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.

இணையத்தில் வைரலாகி வரும் இந்த விளம்பரம் தொடர்பாக இணையவாசிகள் பலரும் தங்கள் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, “நடிகர் அமீர் கான் நடித்த தனியார் வங்கியின் விளம்பரத்தைப் பற்றி புகார் எழுந்தது. அதன் பிறகு நானும் அந்த விளம்பரத்தைப் பார்த்தேன். அதில் காண்பிக்கப்படும் காட்சிகள் சமூகத்துக்கு பொருத்தமாக இருக்குமென நான் கருதவில்லை. இந்திய மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை மனதில் வைத்து அமீர் கான் இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்க தேர்வு செய்ய வேண்டும்.

இந்திய பாரம்பர்யம், பழக்கவழக்கங்கள் மற்றும் தெய்வங்கள் பற்றி புண்படுத்தப்படுவது தொடர்கிறது. குறிப்பாக அமீர் கானைப் பற்றி இதுபோன்ற விஷயங்கள் தொடர்ந்து வருகின்றன. ஒரு குறிப்பிட்ட மதத்தின் உணர்வுகள் இதுபோன்ற செயல்களால் புண்படுத்தப்படுகின்றன. அவர் யாருடைய உணர்வுகளையும் புண்படுத்த அனுமதிக்கமாட்டார் என்று நான் நம்புகிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.