அரக்கோணம் கடற்படை விமானதளத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து 2 தொழிலாளிகள் படுகாயம்

அரக்கோணம்: அரக்கோணத்தில் உள்ள ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து 2 தொழிலாளிகள் படுகாயம் அடைந்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஐஎன்எஸ் ராஜாளி கடற்படை விமான தளம் உள்ளது. இங்குள்ள விமான ஓடுபாதை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புற்கள் முளைத்து காணப்படுகிறது. இவற்றை அறுத்து சுத்தம் செய்வதற்காக, அரக்கோணம் அடுத்த பெருமூச்சு பகுதியை சேர்ந்த செல்வி (45), சங்கர் (40) உள்ளிட்ட சிலர் ஒப்பந்தத் தொழிலாளர்களாக நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுள்ளனர்.

அங்கு புல் அறுத்துக் கொண்டிருந்தபோது அக்கா, தம்பியான செல்வி மற்றும் சங்கர் ஆகியோரின் கை, முதுகுப் பகுதியில் சலசலவென துப்பாக்கி ரவை (குண்டுகள்) பாய்ந்துள்ளது. இதனால் இருவரும் வலியால் அலறி துடித்துள்ளனர்.  இருவரும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து அரக்கோணம் டவுன் போலீசார் மருத்துவமனைக்கு வந்து இருவரிடமும் விசாரித்தனர். விசாரணை குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், அரக்கோணம் கடற்படை விமான தளத்தில்  ஓடுபாதையில் உள்ள பறவைகளை அப்புறப்படுத்துவதற்காக, போர்கன் (துப்பாக்கி) மூலம் சத்தமாக சுடும்போது, அதிலிருந்து ரவை போன்ற சிறிய குண்டுகள் சிதறி செல்லும். அவ்வாறு செல்லும்போது அங்கு வேலை செய்த இருவர் மீதும் பட்டிருக்கலாம் என தெரிகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.