திருமலை: ஆந்திர மாநில போக்குவரத்து கழகத்தில் அதிரடியாக 5 வருடங்களாக டீசல் பஸ்சாக இயக்கப்பட்ட பஸ்களின் இன்ஜினை மாற்றி அமைத்து முழு மின்சார பஸ்களாக மாற்றப்பட்டு வருகிறது. இந்த இ-பஸ் தற்போது திருப்பதி- இடையே இயக்கப்பட்டு வருகிறது. ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்தில் டீசல் இன்ஜினில் இயங்கும் அரசு பஸ்களின் இன்ஜின்களை மாற்றி அமைத்து முழு மின்சாரமாக மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலம், பெங்களூரை சேர்ந்த ‘வீரவாஹனா’ என்ற பஸ் தயாரிப்பு நிறுவனம் 5 ஆண்டுகள் பழமையான டீசல் இன்ஜின் பஸ்களை தேர்ந்தெடுத்து மின்சார பஸ்களாக மாற்றியது.
முன்னோடி திட்டமாக டீசல் பஸ்கள் மின்சார பஸ்களாக மாற்றப்பட்டுள்ளது. டீசல் இன்ஜின் பஸ்சில் பேட்டரியில் இயங்கும் விதமாக இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதற்காக, மின்சார பஸ்சிற்கு ஏற்ப பஸ் மறுசீரமைப்பு செய்யப்பட்டு பாடி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இந்தாண்டு மே மாத இறுதியில் திருப்பதி பணிமனைக்கு வந்த மின்சார பஸ், சாலையில் இயக்க தேவையான அனுமதிகளை பெற்று பதிவு செய்யும் பணியை முடிந்துள்ளது.
சில மாற்றங்களுக்கு பிறகு இந்த இ-பஸ் பூதலப்பட்டு வழியாக திருப்பதி- காணிப்பாக்கம் வழித்தடத்தில் தற்போது சோதனை முறையில் இயக்கப்படுகிறது. திருப்பதி பணிமனையில் பஸ் சார்ஜிங் பாயின்ட் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ்சின் செயல்பாடுகளை வைத்து படிப்படியாக டீசல் செலவை குறைத்து மின்சார பஸ்சாக மாற்றி டீசலுக்கான செலவை குறைக்க அரசு போக்குவரத்து கழகம் அதிரடியாக முடிவு செய்துள்ளது.