மதுரை: கோயில் பொது வழிபாட்டிற்கானது. இதை வியாபாரத்தலமாக்க முடியாது என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. ராமநாதபுரத்தை சேர்ந்த சுப்ரமணியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘கோயில்கள் பெயர்களில் போலியாக செயல்படும் இணையதளங்களை முடக்கவும், சம்பந்தப்பட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. கூடுதல் அட்வகேட் ஜெனரல் வீராகதிரவன் ஆஜராகி, ‘‘கோயில் பெயரில் செயல்படும் தனியார் இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.’ என்றார்.
அப்போது நீதிபதிகள், ‘‘தனியார் இணையதளங்கள் மூலம் லட்சக்கணக்கில் பணம் வசூலிக்கின்றனர். இதை முழுமையாக தடுக்க வேண்டும். கோயில் கோயிலாகத்தான் இருக்க வேண்டும். கோயில் பொது வழிபாட்டிற்கான இடம். வியாபாரத் தலமாக்க முடியாது. கோயில் பொதுவானதுதானே தவிர சிலருக்கானது அல்ல. தனியார் இணையதளங்கள் நடத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர். பின்னர் ஒன்றிய உள்துறை செயலர், சைபர் கிரைம் ஏடிஜிபி மற்றும் தமிழக கூடுதல் தலைமை செயலர் ஆகியோர் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.