வடசென்னை இராயபுரத்தில் அமைந்துள்ள அரசு ஆர்.எஸ்.ஆர்.எம்.மகப்பேறு மருத்துவமனை 1880 ஆம் ஆண்டு ராஜா சர் இராமசாமி முதலியாரால் தொடங்கப்பட்டது. இவர் பெயரின் பெயர் சுருக்கமே ஆர்.எஸ்.ஆர்.எம் ஆகும். இங்கு சென்னை மட்டுமல்லாது பிற மாவட்டங்களிலிருந்தும் மகேப்பேறுக்கென்று பலரும் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இந்த மருத்துவமனையில் கடந்தமாதம் 28ஆம் தேதி தண்டையார்பேட்டை இந்திராநகர் பகுதியை சேர்ந்த சுகன்யா என்ற பெண்ணுக்கு இரண்டு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை என்று ஒரே பிரசவத்தில் மொத்தம் மூன்று குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலமாக பிறந்துள்ளது.
இதில், மூன்று குழந்தைகளும் எடைகுறைவாக பிறந்த காரணத்தினால் மூன்று குழந்தைகளையும் மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்தக் குழந்தைகளுக்கு 15 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை அளிக்கப்பட்டதன் காரணமாக குழந்தைகள் நல்ல முன்னேற்றம் கண்டதினால் இன்று தாயோடு சேர்ந்து மூன்று சேய்களும் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், இம்மருத்துவமனையின் 142ஆம் ஆண்டினை முன்னிட்டு நடைபெற்ற விழாவில் நிறுவனரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் சுகன்யா தெரிவித்ததாவது, “நல்லமுறையில் தன்னையும் தன் குழந்தைகளையும் கண்காணித்து சிகிச்சை வழங்கிய மருத்துவர்களுக்கு நன்றி” என்று தெரிவித்தார்.
அப்போது மருத்துவமனையின் சார்பாக வீடு திரும்பும் தாய் சுகன்யாவிற்கு நினைவு பரிசு ஒன்றினை சட்டமன்ற உறுப்பினர் ஐட்ரீம் மூர்த்தி மற்றும் நிறுவனரின் குடும்பத்தினர் வழங்கினர்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜி, கண்காணிப்பாளர் ராஜலட்சுமி, பேராசிரியர் சாந்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.