தடம்! | சிறுகதை | My Vikatan

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. – ஆசிரியர்

மாலை ஆறு மணிக்கே உரிய சாம்பல் நிற வெளிச்சம். மஞ்சள் நிற தெருவிளக்குகளை சுற்றிப் பூச்சிகள் பறந்து கொண்டிருந்தன. அந்த மாலை வேளையில் திருச்சியிலிருந்து பெங்களூர் செல்லும் ரயிலில் ஏறி அமர்ந்ததும், தனது இருக்கையின் அருகே கிடந்த யாரோ விட்டுவிட்டு சென்றிருந்த அன்றைய செய்தித்தாளை விரித்து படிக்க ஆரம்பித்தான், கருப்புநிற மெலிந்த தேகமும் சுருள்முடியும் அடர்தாடியும் கடுக்கன் மாட்டிய தோற்றமும் கொண்ட இருபத்தைந்து வயது இளைஞன் மாறன். செய்தியை படித்ததும் நீண்ட பெருமூச்சுவிட்டு பொறுமையாக கண்களை மூடி கடவுளிடம் பிரார்த்தனை செய்தான்.

காய்ந்த வயிறுகள் நிரம்பிக் கிடக்கும் வறண்ட பூமி தான் அவனது ஊர். அந்த ஊரின் நுழைவாய் அருகே உள்ள தெற்குப் பகுதி கருவேலங்காட்டில் பெண்கள் மலம் கழிப்பார்கள். அதையொட்டி இருக்கும் மேற்குப் பகுதி கருவேலங்காட்டில் ஆண்கள் மலம் கழிப்பார்கள். அந்த இரண்டு காடுகளையும் ஒட்டியபடி உள்ளது மாறனின் வீடு. அந்த வீட்டை “பீக்காட்டு வீடு” என்றும் சிலர் ஏளனமாக சொல்லி சிரிப்பதுண்டு. அது ஒற்றை அறை அட்டை வீடு என்பதால் அந்த ஒற்றை அறைக்குள்ளயே தான் சமைப்பது, உறங்குவது, உடை மாற்றுவது, படிப்பது என அத்தனையும் நிகழும்.

அந்த ஊர் அருகே உள்ள அரசுப்பள்ளியில் அப்போது ஆறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான் மாறன். அந்தக் காலத்தில் அவன் வீட்டில் அவனோடு ஒரு எருமையும் வளர்ந்து வந்தது. பள்ளி முடிந்து வந்ததும் எருமையை மேய்ப்புக்கு அழைத்துச் சென்று அதோடு சுற்றித்திரிவது தான் அவனுடைய அப்போதைய பொழுதுபோக்கு.

Representational Image

சனி, ஞாயிறு பள்ளி விடுமுறை என்பதால் அவ்விரு நாட்கள் முழுவதுமே எருமையுடன் தான் அவன் நேரம் கழிக்க வேண்டும். அது அவனுடைய விதி. காரணம் அவனுடைய அம்மா, அப்பா இருவருமே கூலி வேலை செய்பவர்கள் என்பதால் வீட்டில் வளர்த்து வரும் அந்த எருமைக்காக அவர்களால் நேரம் செலுத்த இயலாது. அவர்கள் போக ஒரேயொரு ஆயா.

ஆயா, அந்த ஒற்றையறை வீடு அருகே சின்னதாய் கொட்டகை போட்டு கயித்துக் கட்டலும் கிழிந்த போர்வைகளுமாய் முடங்கிக் கிடப்பவள். அவளால் தடியின்றி நடக்க இயலாது. அந்த ஆயாவும் சொத்து எதுவும் சேர்த்து வைக்கவில்லை. ஆதலால் நிலபுலங்கள் இல்லாதவர்கள் வீட்டில் வளரும் அந்த எருமைக்கு உணவெல்லாம் பொதுவெளியில் முளைத்துக்கிடக்கும் புற்கள் தான். சில நாட்களில் அந்தப் புற்களுக்கும் கடும்போட்டி நிலவும். ஒரு சில சமயம் கிடைக்காமலும் போய்விடும்.

அந்த எருமையை வளர்த்து ஆளாக்குவதற்குள் அவனுக்கு போதும் போதுமென்று ஆகிவிட்டது. அந்த அளவுக்கு அடங்காப்பிடாரியாக இருந்தது அந்த எருமை. சில நாட்களில் நள்ளிரவில் கயிற்றை அறுத்துக்கொண்டு போய் பக்கத்து ஊர்களில் உள்ள எதோ ஒரு வயல் வரப்பில் மேய்ந்துவிட்டு யாருக்கும் தெரியாமல் திரும்பி கட்டிவைத்திருந்தே இடத்திற்கே வந்து நிற்கும். இரவு வேளையில் எந்த எருமையும் அசை போடுமே தவிர அதிக அளவில் புதிய உணவை உட்கொள்ளாது. ஆனால் பசி வயிற்றைக் கிள்ள இரவில் உணவு தேடி அலைந்தது மாறனின் எருமை.

பசி தாங்காமல் தன் எருமை இப்படி இரவு வேளையில் சுற்றித்திரிவதையும் கயவன் எவனாவது அதை இழுத்துக்கொண்டு செல்ல வாய்ப்புள்ளதையும் வயல்காரன் அடித்துக்கொள்ள வாய்ப்புள்ளதையும் தன்னுடைய ஆயாவிடம் சொன்னான் மாறன். எருமையின் பரிதாப நிலையை உணர்ந்துகொண்ட ஆயா, பெரிய குடி மக்களிடம் எருமைக்குத் தீனி இரவல் கேட்டாள்.

ஒரு சிலர் இரக்க மனதோடு முன்வந்து “எங்க மாடுங்க தின்னு கழிச்சது போக கட்டுத்தரைல சிந்திக்கிடக்கிறத வந்து அரிச்சு எடுத்து கத்தை கட்டிக்கிட்டு போ…” என்று மாறனிடம் உத்தரவு பிறப்பித்தனர்.

அப்படி பலர் வீட்டு கால்நடைகள் கழித்த தீனிகளை தன் எருமைக்கு முதல் வேளை உணவாக வைத்தான். வேறு வழியில்லை, இதுதான் நமக்கு விதிக்கப்பட்டது என்று எருமையும் முகம் சுளிக்காமல் உண்டு பழகிக்கொண்டது. அந்தத் தீனியில் சாணி வாடை, மூத்திர வாடை வீசும். இருந்தாலும் அதை பொருட்படுத்தாமல் எருமை உண்பதை பார்த்து மாறன் கண் கலங்குவான். அவன் அழுவதை தாங்கிக்கொள்ள முடியாமல் அவன் முகத்தில் வடியும் கண்ணீரை தன் நாக்கால் நக்கி சுத்தம் செய்து அவனுடைய கன்னத்தில் வடவட உணர்வை ஏற்படுத்தும் எருமை.

Representational Image

ஆனால் அந்த உணவும் எருமைக்கு பத்தவில்லை. பசியால் கத்திக்கொண்டே இருக்கும். ஒருமுறை அவன் வீட்டருகே தார்ச்சாலையில் வைக்கப்புல்லை உடைத்துப்போட்டு காய வைத்திருந்தார்கள். சிறுவர் சிறுமிகள் அதில் துள்ளிக் குதித்து விளையாடிக்கொண்டிருந்தனர். அவர்களை துரத்திவிட்டு நான்கைந்து பெரியவர்கள் வைக்கப்புல்லை அரித்துக் கத்தைக்கட்டி தூக்கிச் சென்றனர். அவர்கள் அரித்து தூக்கிச் சென்றதுபோக மிஞ்சிய வைக்கப்புற்கள் சிதறிக் கிடந்தது. அவற்றை அரித்து சாக்குப் பைக்குள் போட்டு வீட்டிற்கு எடுத்து வந்து குட்டி வைக்கப்போரில் போட்டான். அந்தக் குட்டி வைக்கப்போர் டிராக்டர், மாட்டுவண்டிகளில் வைக்கப்புல் தூக்கிச் சென்றபோது சாலையோரம் சிதறி விழுந்ததிலிருந்து சேகரித்து அமைத்தது. வைக்கப்போரை சீர்படுத்திவிட்டு படுதாவை போட்டு மூடி வைத்தான். அதன்மூலம் பல நேரங்களில் எருமையின் பசியை தீர்க்க முயல்வான். ஆனால் அதுவும் பெரும்பாலும் தோல்வியில் முடியும்.

ஒரு நாள் அதிகாலை முதலே எருமை வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்து கத்திக்கொண்டே இருந்தது. அது விடியற்காலையிலயே கத்துவதன் நோக்கம் புரியாத மாறன், தன் ஆயாவிடம் ஐயத்தைப் போக்க முயன்றான்.

“ஆயா… தீனி போட்டும் எரும ஏன் இப்படி கத்திட்டே இருக்குது… நான் வேணா இன்னுங்கொஞ்சம் வைக்கப்புல்ல அள்ளி போடட்டா… ”

“வேணாம்… அத கயித்தோட இழுத்துட்டு வா… கெடாப்போட கூட்டிட்டு போகணும்… ”

ஆயா சொன்னது போலவே, எருமையை கையோடு இழுத்துச் சென்று கால்நடைகளுக்கு கெடாப்போடும், நெஞ்சு முழுக்க வெள்ளைமுடியும் வழுக்கைத் தலையும் கொண்ட பாண்டியன் வீட்டு காய்ந்த பூவரச மரத்தின் அருகேயுள்ள கட்டுத்தரையில் நிறுத்தினான்.

இரண்டு பெரிய மரக்கட்டைகளை நட்டு வைத்து அதற்கு குறுக்காக ஒரு பலமான மரக்கட்டையை வைத்து இறுகக் கட்டப்பட்டிருந்தது. அதில் தான் பாண்டியனின் பேரன்களும் பேத்திகளும் தொத்திக்கொண்டு குரங்கு சேட்டை செய்வார்கள். அந்த மரக்கட்டையில் எருமையின் கயிறை இறுகக்கட்டினான் பாண்டியன். எருமையின் கழுத்து இப்போது குறுக்காக இருந்த மரக்கட்டையில் அமர்ந்திருந்தது.

பாண்டியன் தன் வீட்டு காளையை அழைத்து வந்து அந்த எருமையுடன் இணைய செய்தான். அதை கண் இமைக்காமல் வாய் ஆவென்று பார்த்துக்கொண்டிருந்த மாறனை பார்த்து ” டேய் போடா அந்தப்பக்கம்… கண்ணுசிமிட்டாம பாக்குறான் பாரு… ” என்று பாண்டியன் அவனை விரட்டியடித்தான்.

சில மாதங்கள் கழித்து பக்கத்து ஊரில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது. எருமையை அழைத்துச்சென்று அது சினையாகிவிட்டதா என்று பரிசோதிக்க, ஆயா அவனிடம் அறிவுறுத்தியிருந்தாள். ஆயா சொன்னதைப் போலவே எருமையை அழைத்துச்சென்று அங்கு வெள்ளை கோர்ட் போட்டுக்கொண்டு காய்ந்துபோன புங்கமரத்தடியில் அமர்ந்திருந்த மருத்துவரிடம் காண்பித்தான்.

Buffalo cow

எருமையின் பிறப்பு உறுப்புக்குள் கிளவுஸ் கையை விட்டு சோதித்து பார்த்த டாக்டர், “செனயா இருக்கு… இழுத்துட்டு போ…” என்றார். இந்த நற்செய்தியை ஆயாவின் காதில் போட்டான். ஆயாவுக்கு உற்சாகம் தாங்கவில்லை. எருமையை நல்ல விலைக்கு விற்றிட வேண்டுமென்று முடிவெடுத்தாள். விலையை பத்தாயிரத்தில் நிறுத்தினாள். அதனாலயே பலரும் எருமையை வாங்க முன்வரவில்லை. காரணம் எருமையின் மெலிந்த உடலமைப்பு பத்தாயிரத்துக்கு கட்டுப்புடி ஆகாதது. அதே சமயம் எருமைக்கு தீனி எதுவும் ஏற்பாடு செய்யவில்லை. எப்போதும் இருந்த அதே நிலை. அவ்வப்போது உண்டியல் காசை எடுத்துச் சென்று கத்தை பத்து ரூபாய்க்கு விற்ற கரும்புத் தோகையை மாறன் வாங்கி வந்தது மட்டுமே எருமைக்கு சிறப்பு உணவாகக் கிடைத்தது.

உண்மையிலயே வயிற்றில் எதாவது வளர்கிறதா என்கிற சந்தேகம் அவனுக்கு அடிக்கடி எழும். அப்போதெல்லாம் எதோ ஒரு நம்பிக்கையுணர்வோடு எருமையின் வயிற்றில் முத்தமிடுவான்.

பொங்கல் வந்தது. எருமையை நன்கு குளிப்பாட்டி அதன் கொம்பில் வண்ணங்கள் பூசி கொட்டமுத்து இலையில் சர்க்கரை பொங்கலும் பச்சரிசி பொங்கலும் வைத்து வணங்கி முதல்வேளையாக அந்தப் படையலை எருமைக்கு ஊட்டிவிட எருமை நாக்கைச் சுழட்டி ருசித்து உண்டது. கன்னுக்குட்டி பிறந்துவிட்டால் அதற்கும் இதுபோல் வண்ணங்கள் பூசிவிட்டு அதற்கு படையலை ஊட்டிவிடுவது போல நினைத்துப் பார்த்தான்.

சரியாக பத்து மாதம் ஆனது. ஆனால் எருமை யாரிடமும் வியாபாரமாகவில்லை.

அன்று பள்ளியில் “பசுமைப்புரட்சி” எனும் தலைப்பில் கட்டுரை டெஸ்ட் சொல்லியிருந்தார்கள். அதிகாலை ஐந்து மணிக்கே எழுந்து கட்டுரை நோட்டை விரித்து வைத்து பத்மாவதி டீச்சர் எழுதி போட்டிருந்ததை அப்படியே மனப்பாடம் செய்தான் மாறன். டெஸ்ட்டில் ஒரு வார்த்தை முன்னபின்ன மாறிப் போனால் பத்மாவதி டீச்சரின் மூங்கில் குச்சி மாறனின் குண்டியைப் பதம் பார்த்துவிடும். ஆதலால் அப்படியொரு காட்டு மனப்பாடம்.

மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்துக் கொண்டிருந்தவன் எதோ ஒரு உள்ளுணர்வின் காரணமாக அந்த அதிகாலை சாம்பல் நிற வெளிச்சத்தில் கட்டுத்தரையை எட்டிப்பார்த்தான். எருமை அருகே அதனுடைய கன்று நின்றுகொண்டிருந்தது. கன்றுக்குட்டியை சுற்றி ஒரு மின்மினிப்பூச்சி பறந்துகொண்டிருந்தது. கண்கள் சிமிட்டால் கன்றுக்குட்டியை ஆச்சர்யமாய்ப் பார்த்தான். யாருக்கும் எந்த சிரமத்தையும் வைக்காமல் மௌனமாக இரவோடு இரவாக ஒரு கன்றை ஈந்திருந்தது எருமை. அந்தக் கன்றை முதன்முதலில் பார்த்தவன் என்ற முறையில் பெருமிதம் கொண்டான் மாறன். ஆனால் அவன் ஆயாவுக்கோ கவலை! கன்று ஈன்றிய பிறகு எருமையின் விலை குறைந்திடும் என்று.

அன்று பள்ளிக்கு விடுமுறை எடுத்துவிட்டு நாள் முழுக்க எருமையின் கன்றோடு துள்ளிக்குதித்து விளையாடினான். அன்றைய நாளில் சீம்பாலின் சுவை மட்டுமே அவன் நாக்கில் ஒட்டிக்கொண்டிருந்தது. அடுத்த நான்கு நாள்கள் வரை எருமை பாலூற்றி ஆயா காய்ச்சி தந்தவை எல்லாம் அமிர்தமாய் அவன் மனதை குளிர்வித்தது.

எருமை கன்றை ஈன்று ஒரு வாரம் ஆகியிருந்த தருணம் அது. வீட்டில் அவன் அப்பா அம்மா இல்லாத சமயம். ஆயா வீட்டிற்குள் படுத்துக்கொண்டு மதியம் ஒளிபரப்பாகும் டிவி தொடரை மும்முரமாகப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

கிருஷ்ணர் பசுவின் மடியில் பால் குடிக்கும் போட்டோவை எங்கோ பார்த்தது மாறனுக்கு நியாபகம் வந்தது. ஆயாவிடம் சென்று,

“ஆயா… எரும மடில நான் பால் குடிக்கட்டா…” என்றான்.

“அட அறிவுகெட்டவனே… அப்படி கீது செஞ்சு தொலைச்சிடாதடா… அது எட்டி உதச்சதுனா உன் பல்லு பவுடுலாம் பேந்துடும்… ” என்றாள் டிவி பார்த்தபடியே.

Representational Image

ஆனால் அவனுக்கு அந்த ஆர்வம் குறையவில்லை. கன்றுக்குட்டி அன்று காலையில் ஓரளவுக்கு நன்கு பால் குடித்து முடித்திருக்க, பால்காரர் அரை லிட்டருக்கும் குறைவான பாலை பீய்ச்சிக்கொண்டு போயிருக்க, அவன் அழுங்காமல் சென்று தன்னை கருப்பு கிருஷ்ணராக நினைத்துக் கொண்டு எருமையின் மடியில் வாய் வைத்து சப்பிப் பார்த்தான். பால் வரவே இல்லை. வாயை எடுத்துவிட்டு பால்காரர் செய்வதைப் போல கையால் இழுத்துப் பார்த்தான். பாலுக்குப் பதிலாக ரத்தம் வந்தது. எருமை லேசாக அதிர்ந்தது. அதன் ரத்தத்தை பார்த்ததும் பயந்து நடுங்கிக்கொண்டு தன் ஆயாவிடம் ஓடிச்சென்று, “ஆயா… எரும மடில பால் வரல… ரத்தம் தான் வருது…” என்றான்.

வீட்டிலிருக்கும் இரண்டு கொப்பரைகளை விற்றாவது இந்த ஜீவனுங்களுக்கு தீவனம் வாங்கிப் போடனும் என்று நினைத்துக் கொண்ட ஆயா, “நான் தான் உன்கிட்ட அப்பவே சொன்னேன்ல… இப்ப ரத்தம் வர வச்சிட்டியா… இனி மேலாச்சும் கைய வச்சிட்டு சும்மா இரு…” என்று டிவி பார்த்தபடியே அதட்டினாள். அதன் பிறகு எருமையின் மடியில் பால் குடிக்கலாம் என்ற எண்ணமே அவனுக்கு வரவில்லை.

அன்று அதிகாலை ஐந்து மணிக்கு மாறனுக்குத் தூக்கம் தெளிந்தது. வழக்கம்போல கட்டுத்தரையை ஆவலோடு நோக்கினான். அங்கு எருமை இல்லை. அதனுடைய கன்றும் இல்லை. டார்ச்லைட்டை எடுத்துக்கொண்டு மேய்ப்புக்கு அழைத்துச் செல்லும் இடத்திற்கெல்லாம் சென்று தேடிப்பார்த்தான். காலைக்கடன் முட்டியதால் எப்படியும் எருமையும் கன்றும் கிடைத்துவிடும் என்கிற ஒருவித நம்பிக்கையில் அவசர அவசரமாக கையில் டார்ச்லைட்டை சுமந்தபடி ரயில் தண்டவாளம் நோக்கி நடந்தான். அந்த ஊரில் உள்ள அவனை போன்ற வசதியற்ற வீட்டுப்பிள்ளைகள், பீக்காட்டு வீடு என்றழைக்கப்படும் அவனது வீட்டருகே உள்ள கருவேலங்காட்டில் ஒதுங்காமல் ஊருக்கு வெளியே இருக்கும் ரயில் தண்டவாளம் அருகே தான் மலம் கழிக்க அமர்வார்கள்.

அவனும் அவ்வாறே கையில் டார்ச்லைட் பிடித்தபடி அமர்ந்து கழிக்க வேண்டிய கடனை கழித்து முடித்தான். அருகே இருந்த குட்டையில் பின்புறத்தை கழுவிக்கொண்டு வீட்டை நோக்கி நடக்க முற்பட்டான். அப்போது எதேர்ச்சையாக, சற்று தொலைவில் ரயில் தண்டவாளத்தை ஒட்டி பெரிய உருவம் படுத்துக்கிடந்ததை பார்த்து அதன் அருகே சென்றான். அருகே செல்ல செல்ல அது தன் எருமையை போன்றே தெரிந்தது. பதட்டத்தோடு அருகே சென்று பார்த்தான். அது அவனுடைய எருமை தான். பசிக்கு உணவு தேடி வந்தது எப்படியோ வழிதவறி ரயில் பாதையில் வந்து மாட்டிக்கொண்டது. உடனே அதனுடைய கன்றையும் தேடினான்.

Representational Image

எருமை அடிபட்டு கிடந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் தலை ஒரு பக்கம் உடல் ஒரு பக்கம் என்று சிதறிக்கிடந்தது கன்றுக்குட்டி. தன் அம்மா ரயிலுக்குள் பாய்ந்ததால் கன்றும் பின்னாடியே பாய்ந்ததா? இல்லை கன்று ரயிலுக்குள் பாய்ந்ததால் அம்மாவும் ரயிலுக்குள் பாய்ந்ததா என்று அவனால் கணிக்க முடியவில்லை. அதிர்ச்சியிலிருந்து மீளாமல் அங்கேயே நின்றான்.

சூரியன் உதித்திருந்தது. ஊர்மக்கள் சிலர் குண்டாவையும் சாக்கையும் எடுத்துக்கொண்டு வந்து சிதறிக்கிடந்த எருமையின் கறியையும் கன்னுக்குட்டியின் கறியையும் வெட்டிக் கூறுபோட்டு அள்ளிப்போட்டுக்கொண்டு சென்றனர். ஆங்காங்கே படிந்துகிடந்த கன்னுக்குட்டியின் ரத்தம் மீதும் எருமையின் ரத்தம் மீதும் நான்கைந்து சிவப்புத் தட்டான்கள் அமர்வதும் பறப்பதுமாய் இருந்தன. அதிலொரு சிவப்புத்தட்டான் பறந்து வந்து அவன் நெற்றிப்பொட்டில் அமர அவனுக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது. கதறி அழுவதை அவனால் கட்டுப்படுத்த முடிந்தாலும் கண்ணீர் சுரப்பதை அவனால் நிறுத்த முடியவில்லை. அந்தக் கண்ணீரை தன் நாவால் நக்கித் துடைத்துவிட எருமையும் கன்றுக்குட்டியும் தற்போது இல்லை என்று வருந்தினான்.

ஊர்மக்கள் அள்ளிச்சென்றது போக மிஞ்சியிருந்த எருமையின் வண்ணம் மங்கிப்போன கொம்புகளை எடுத்து வந்து தன் வீட்டில் பத்திரப்படுத்தி வைத்தான். கறியை அள்ளிச்சென்றவர்களில் ஒருவர் எருமையின் கண்களையும் கன்னுக்குட்டியின் கண்களையும் நரம்பு பைக்குள் வைத்து கொண்டுவந்து கொடுக்க நடுங்கிய சின்னஞ்சிறு உள்ளங்கையில் அந்த நான்கு கண்களை வாங்கினான். கை நடுக்கத்துடனே அந்தக் கண்களை கட்டுத்தரையில் புதைத்து அதன் மீது வேப்பங்கன்றை நட்டு வைத்தான். அன்றிரவு உறக்கத்தின்போது அந்த வேப்பங்கன்று மரமாக நன்கு வளர்ந்து நிற்க பறவைகள் எல்லாம் அங்கு தஞ்சமடைய தொடங்கி ஊர்முழுக்க விதைகளை பரப்பி ஊரையே பசுமையாக்குவது போல மாறன் கனவு கண்டான். கனவு நிஜமாக வேண்டுமென்று அவனது மனம் ஏங்கியது. ஆனால் அவனுக்கு வரும் தீய கனவுகள் மட்டுமே நிஜத்தில் நடந்துள்ளன என்பதால் ஒருவித அதிருப்தியுடன் தான் அன்று கண்விழித்தான்.

ஆயாவும் தன் கால்நடைகள் செத்த செய்தி கேட்ட அதிர்ச்சியாலும் மாறனின் இத்தனை நாள் உழைப்பும் அன்பும் இப்போது ஒன்றுமில்லாமல் போனது என்கிற துயரத்தாலும் படுத்த படுக்கையாகி இறந்துபோனாள். நாட்கள் பல கடந்தது. சிறுகசிறுக சேகரித்து வைத்திருந்த வைக்கப்போரை, கழித்துப்போட்ட தீனியை இரவல் தந்தவர்களின் கால்நடைகளுக்குப் பகிர்ந்தளித்தான் மாறன்.

Representational Image

ரயிலில் இருந்த செய்தித்தாளை விரித்துப் படித்ததும் ரயிலில் எருமை அடிபட்டபோது நடந்ததைப் போல இப்போதும் அதேபோல் அவனால் கண்ணீர் சுரப்பதை கட்டுப்படுத்த முடியவில்லை. இப்போதும் அவனது உள்ளம் எருமையின் நாக்கை நினைவுகூர்ந்தது.

ஓசூர் அருகே பசிக்காக உணவு தேடி வந்த யானை தன் குட்டியுடன் ரயிலில் அடிபட்டு இறந்து போனது என்கிற செய்தி தான் தற்போதைய செய்தித்தாளில் அவன் படித்தது. “நான் பயணிக்கிற இந்த ரயில்ல பசிக்காக உணவு தேடி வந்த எந்த ஜீவனும் தப்பித்தவறி கூட சிக்கி உயிரிழந்திடக்கூடாது…” என்பது தான் அவனுடைய தற்போதைய பிரார்த்தனை.

பிரார்த்தனையின்போது சந்தன நிலவொளி வெளிச்சத்தில் ஆயிரம் யானைகளும் எருமைகளும் நாய்களும் காட்டுப்பன்றிகளும் ரயில்பாதையை வழிமறித்து நிற்பதாகவும், வான் நட்சத்திரங்களை புள்ளிகளாக தன் உடலில் சுமந்திருக்கும் மான்கள் எல்லாம் ரயிலின் மேற்கூரையில் ஏறிக் கும்பலாய் சூழ்ந்து நிற்பதாகவும் அவைகள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து ஆக்ரோசமாக ரயில்மீது முட்டிமோதி ரயிலை கவிழ்க்க முயன்று பிறகு மனமில்லாமல் பின்வாங்குவது போலும் ரயிலோ மனசாட்சியின்றி அவைகள் மீது அசுர வேகத்தில் மோதிச் செல்வது போலும் காட்சிகள் தோன்றின. வாயில்லா ஜீவன்களின் உயிர்இறுதி ஓலக்குரலும் ரயிலின் க்கூ என்கிற தொடக்க ஒலியும் வானம் அதிர ஒன்றாய்க் கேட்க காதை அடைத்துக்கொண்டான் மாறன். சில நொடிகளுக்குப் பிறகு அந்தச் சத்தம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து முற்றிலுமாய் நின்றுவிட கண்ணீரை துடைத்துக்கொண்டு கண்களை திறந்தான்.

ரயில் கிளம்பியது.

ரயிலின் தடக் தடக் சத்தமும் அவனது லப்டப் இதயத்துடிப்பு சத்தமும் இப்போது அவனது காதிற்குள் மாறிமாறி ஒலித்துக்கொண்டிருந்தன.

யுவராஜ் மாரிமுத்து

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – [email protected] என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.