“தேர்வில் வென்ற பிறகுதான் சவால்கள் அதிகம்"- ஐ.ஏ.எஸ் அனுபவம் பகிரும் கோவை மாவட்ட ஆட்சியர்!

ஆனந்த விகடன் மற்றும் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இணைந்து, ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 1,2 தேர்வுகளில் வெல்வது எப்படி? என்ற இலவசப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் ஏற்கெனவே சென்னை, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இந்தப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டுள்ளது.

கோவை பயிற்சி முகாம்

இந்நிலையில், வருகிற அக்டோபர் 30ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கோவை இந்துஸ்தான் கலை, அறிவியல் கல்லூரி அரங்கில் இந்தப் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் சமீரன், காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி இயக்குநர் சத்யஶ்ரீ பூமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிடம் உரையாட உள்ளனர்.

இதுகுறித்து கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ் சமீரன் ஐ.ஏ.எஸ் நம்மிடம் கூறுகையில், “பள்ளியில் படிக்கும்போதே எனக்கு சிவில் சர்வீஸ் மீது விருப்பம் இருந்தது. மருத்துவப் படிப்பு படிக்கும்போது, என் சீனியர்கள் பலரும் இந்தத் தேர்வுக்கு தயாராகி வந்தனர். அவர்களுடன் சேர்ந்துதான் தேர்வு குறித்து கூடுதலாகத் தெரிந்துகொண்டேன்.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஐ.ஏ.எஸ்

மருத்துவப் படிப்பு முடிந்தவுடன், 2011ம் ஆண்டு யு.பி.எஸ்.சி தேர்வை நான் எதிர்கொண்டேன். அதில் இந்திய அளவில் 66வது இடம் பிடித்து வெற்றி பெற்றேன். சரியான பயிற்சி, அதற்குத் தகுந்த நண்பர்களுடன் எடுத்த கூட்டு முயற்சி எல்லாமே எனக்குக் கைக்கொடுத்தன.

தேர்வு எழுதி வெற்றி பெற்றுவிட்டாலே சாதனையாக நினைப்பார்கள். உண்மையில் தேர்வில் வெற்றி பெற்ற பிறகுதான் தினம் தினம் ஏராளமான சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். நான் மருத்துவப் படிப்பை படித்திருந்தாலும், சிவில் சர்வீஸ் வந்த பிறகு நிறைய துறைகளில் பணியாற்ற வேண்டியுள்ளது. சப் – கலெக்டராக பணியாற்றிய காலகட்டத்துக்கு பின் நான் மீன்வளத்துறையில் கூடுதல் இயக்குநர், திட்ட இயக்குநர், இயக்குநர் என பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றியிருக்கிறேன்.

மீனவர்கள்

மீனவர்களின் வாழ்க்கை, கலாசாரம் எப்படி இருக்கிறது, அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட என்னென்ன திட்டங்கள் கொண்டு வரலாம் என்பதெல்லாம் எனக்கு புதிய அனுபவங்களாக இருந்தன.

மீனவர்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், புயல் போன்ற பேரிடர் காலங்களில் அவர்களைக் காப்பது என சொல்லிக் கொண்டே போகலாம். மேற்கு கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள், ஆழ்கடல் மீன் பிடிப்புக்கு (200 நாட்டிக்கல் மைல்) செல்வார்கள். அங்கு தகவல் பரிமாற்ற வசதி எல்லாம் மிகவும் குறைவு. புயல் காலங்களில் இது மிகவும் சவாலாக இருந்தது.

மீன்பிடிப்பு

அதற்காக இஸ்ரோ, பி.எஸ்.என்.எல் மற்றும் தொலைதொடர்பு நிறுவனங்களுடன் இணைந்து நாட்டிலேயே முதல்முறையாக மீனவர்களுக்கு சாட்டிலைட் போன் கொடுத்தோம். அதன் மூலம் பேரிடர் காலங்களில் உயிரிழப்புகளை தடுக்க முடிகிறது. எனக்கு மிகவும் திருப்தியான பணியாக அது இருந்தது.

இது சிறிய எடுத்துக்காட்டுதான். மக்களுக்காக பணியாற்றும் பிரமாண்டமான ஓர் வாய்ப்பு தான் இது. மேலும், கொரோனா காலத்தில் தொடங்கி வருவாய்த்துறையில் பணியாற்றிய வரை என் 10 ஆண்டு கால பணியில் நிறைய அனுபவங்கள் உள்ளன. 35 ஆண்டுகள் பணியில் இருக்கும்போது, நமது நல்ல முடிவுகளால் பல்வேறு மக்களின் வாழ்க்கையை நல்ல நிலைக்கு உயர்த்த நாம் கருவியாக இருக்க முடியும்.

கோவை

இதுபோன்ற சுவராஸ்யமான, நுட்பமான தகவல்களை எல்லாம் நேரில் சொல்கிறேன். 30ம் தேதி சந்திப்போம்” என்றார்.

முன்பதிவுக்கு

Loading…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.