பச்சையப்பன் கல்லூரி உதவி பேராசியர்கள்: கல்லூரி கல்வி இயக்குனருக்கு உத்தரவு!

பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013, 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் உரிய தகுதியை பெற்றிருக்கவில்லை எனவும், தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இதையடுத்து, அறக்கட்டளையை நிர்வகித்த ஓய்வுபெற்ற நீதிபதி, 152 உதவிப் பேராசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இது சம்பந்தமான வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கடந்த 2013, 2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேரிரியர்களின் கல்வித்தகுதியை ஆராய வேண்டும் எனக் கூறி, இவர்களின் கல்விச் சான்றுகளை பெற்று சரிபார்க்கும்படி கல்லூரி கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்டார்.

சான்றிதழ் சரிபார்ப்பு பணிகளை முடித்து நவம்பர் 14ஆம் தேதி விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய கல்லூரி கல்வி இயக்குனருக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 14ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

மேலும் அந்த உத்தரவில், தகுதியற்ற நபர்களை கல்லூரி ஆசிரியர்களை நியமித்தால் மாணவர்கள் தான் பாதிக்கப்படுவர் எனத் தெரிவித்த நீதிபதி, கல்லூரி ஆசிரியர்கள் கல்வித் தகுதி விஷயத்தில் எந்த அனுதாபமும், சமரசமும் காட்டக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.