விசாரணை கைதிகளை அடித்து துன்புறுத்துவதாக மனித உரிமை ஆணையத்தில் புகார்!
தமிழக அமைச்சர் கே.என் நேருவின் சகோதரர் ராமஜெயம் 2012ம் ஆண்டு மார்ச் 29ம் தேதி திருச்சியில் நடைப்பயிற்சி சென்ற போது படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரின் உடல் திருச்சி கல்லணை சாலையில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் காணப்பட்டது. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக முதலில் திருச்சி மாநகர போலீசார் விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். வழக்கில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் ராமஜெயம் கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்கக் கோரி ராமஜெயம் மனைவி லதா, உயர் நீதிமன்றம் மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இதன் பின்னர் இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது.
சிபிஐக்கு மாற்றப்பட்ட பின்னரும் கொலையாளிகள் பிடிபடவில்லை. அதையடுத்து, ராமஜெயத்தின் சகோதரர் ரவிச்சந்திரன் இவ்வழக்கை தமிழக அரசின் சிறப்பு புலனாய்வுக் குழு மூலம் விசாரிக்க வேண்டும்’ என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்தார். உயர்நீதிமன்ற உத்தரவின்படி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில், டிஎஸ்பி மதன்குமார் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை தீவிர படுத்தியுள்ளது. ராமஜெயம் கொலை வழக்கு குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு 50 லட்ச ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் பட்டிருந்தது. , இந்த வழக்கு தொடர்பாக சென்னையை சேர்ந்த எம்எல்ஏ எம்.கே.பாலன் கடத்தி கொலைப்பட்ட வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடிகள் திண்டுக்கல் கணேசன், புதுக்கோட்டை செந்தில்குமார் ஆகியோரை பிடித்து சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் நபர்களை சிறப்பு புலனாய்வு குழுவினர் கடுமையாக தாக்குவதாகவும் துன்புறுத்துவதாகவும் சிறைக் கைதிகள் உரிமை குழு தலைவர் வழக்கறிஞர் புகழேந்தி தமிழ்நாடு மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில் இந்த குழு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகிறதா என கண்காணித்து மனித உரிமை மீறலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் மனு அளித்துள்ளார்.