ஸ்டாலின் பேச்சு… கிண்டல் செய்து திமுக உடன்பிறப்புகளை சீண்டிய அண்ணாமலை!

திமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ( அக்டோபர் 9) சென்னையில் நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் ஸ்டாலின் பேசும்போது, ” தினமும் காலை கண்விழிக்கும்போது நம்மவர்கள் (திமுக நிர்வாகிகள்) யாரும் இன்று புது பிரச்னைகள் எதையும் உருவாக்கி இருக்கக்கூடாதே என்ற நினைப்புடன்தான் கண் விழிக்கிறேன். இந்த எண்ணமே சமயத்தில் என்னை தூங்கவிடாமல்கூட செய்து விடுகிறது” என்று பேசியிருந்தார்.

பொது இடங்களில் தங்களது சர்ச்சையான பேச்சுகள், செயல்பாடுகளால் கட்சிக்கும், கட்சித் தலைமைக்கும் தர்மசங்கடத்தை ஏற்படுத்திவரும் மூத்த அமைச்சர்களான கே.என்.நேரு, கே.கே.எஸ்.எஸ.ஆர். ராமச்சந்திரன், பொன்முடி போன்றவர்களை மனதில் வைத்துதான் ஸ்டாலின் இவ்வாறு பேசியிருப்பதாக அரசியல் அரங்கில் பரவலாக புரிந்து கொள்ளப்பட்டது.

இதுதான் நேரம் என, ‘திமுக நிர்வாகிகளான மூத்த அமைச்சர்கள் சிலரை மனதில் வைத்துதான் ஸ்டாலின் இப்படி பேசியிருக்கிறார். இதன் மூலம் தமிழகத்தில் காட்டாட்சி நடைபெற்று வருகிறது என்பதை முதல்வரே ஒப்புக் கொண்டுள்ளார்’ என்று தமிழக பாஜக விமர்சித்திருந்தது.

‘ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, விடிந்தால் நமக்கு அமைச்சர் பதவி இருக்குமோ என்ற பயத்தில் அதிமுக அமைச்சர்கள்தான் தூக்கம் தொலைத்து இருந்தனர். ஆனால், தற்போதைய முதல்வர் ஸ்டாலினோ, திமுக அமைச்சர்களை எண்ணி தூக்கம் தொலைக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளார் என்று நெட்டிசன்களும் தங்கள் பங்குக்கு ஸ்டாலினை விமர்சித்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமது இரண்டு வாரகால அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு இன்று சென்னை திரும்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சென்ன விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ஹிந்தி திணிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசினார். முக்கியமாக, ‘அண்மையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் தலைவர்

பேச்சு பாஜகவை மையப்படுத்தியே இருந்தது’ என்று அண்ணாமலை தெரிவித்தார்.

அத்துடன், ‘திமுக நிர்வாகிகள் சிலரால் தமது தூக்கம் தொலைகிறது’ என்று ஸ்டாலின் பேசியதை சுட்டிக்காட்டிய அண்ணாமலை, ‘முதல்வர் ஸ்டாலினை கொஞ்சம் தூங்கவிடுங்க’ என்று திமுக உடன்பிறப்புகளுக்கு அட்வைஸ் செய்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.