ஹிஜாப் தடை தொடருமா? கர்நாடக அமைச்சர் விளக்கமும், புது சர்ச்சையும்!

கர்நாடகாவில் தொடங்கிய ஹிஜாப் சர்ச்சை உச்ச நீதிமன்றம் வரை சென்று தேசிய அளவில் மிகுந்த கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றம் விதித்த தடைக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்றைய தினம் (அக்டோபர் 13) தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆனால் தடை செல்லும் என்றும், செல்லாது என்றும் மாறுபட்ட தீர்ப்புகளை இரண்டு நீதிபதிகள் வழங்கியதால் குழப்பம் நீடித்து வருகிறது.

அடுத்தகட்டமாக கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஹிஜாப் தடை தொடர்கிறதா? இல்லை புதிய உத்தரவு வரும் வரை விலக்கு அளிக்கப்படுகிறதா? என்ற கேள்வி எழுந்தது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் கர்நாடக மாநில தொடக்க மற்றும் இடைநிலை கல்வித்துறை அமைச்சர் பிசி நாகேஷ் பதிலளித்துள்ளார்.

அதில், ஜனநாயகத் தன்மையுடன் செயல்பட்டு வரும் கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறது. ஆனால் நாங்கள் மேலும் சிறப்பானதொரு தீர்ப்பை எதிர்பார்த்தோம். உங்கள் அனைவருக்கும் தெரியும். உலகம் முழுவதும் ஹிஜாப்பிற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. ஆனால் நமது உச்ச நீதிமன்றமோ மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறது. இருப்பினும் கர்நாடக உயர் நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியதோ, அது தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

கர்நாடக கல்வித்துறை சட்டத்தின் கீழ் வகுக்கப்படும் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படும். அடுத்ததாக கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு ஹிஜாப் வழக்கு மாற்றப்படும். அதில் சிறப்பான தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்தார். தற்போதைய சூழலில் கர்நாடக மாநிலத்தின் பள்ளி, கல்லூரி வகுப்பறைகளில் ஹிஜாப் அணிவதற்கான தடை தொடரும்.

வகுப்பறைகளில் மதம் சார்ந்த விஷயங்களுக்கு நம்முடைய அரசு ஒருபோதும் அனுமதி அளிக்காது. எனவே ஹிஜாப்பிற்கு வகுப்பறைகளுக்குள் அனுமதி கிடையாது என்பதை தெளிவுபடுத்துவதாக குறிப்பிட்டார். இந்த இடத்தில் உலகம் முழுவதும் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் பிசி நாகேஷ் பேசியதற்கு சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஹிஜாப் அணிய பல்வேறு கல்வி நிறுவனங்களில், மாநிலங்களில், நாடுகளில் அனுமதி அளிக்கப்பட்டு தான் வருகின்றன. குறிப்பாக ஹிஜாப் அணிய அனுமதிக்குமாறு போராட்டங்கள் நடந்து வருவதையும் பார்க்க முடிகிறது. அப்படியிருக்கையில் ஒட்டுமொத்தமாக தடைக்கு எதிராக மக்கள் போராடி வருவதாக கூறுவதை ஏற்க முடியாது எனச் சிலர் பதிவிட்டு வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.