புதுடில்லி :வகுப்பறைகளில் மாணவியர், ‘ஹிஜாப்’ அணிவதற்கு தடை விதிக்கும் கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்க்கும் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அமர்வின் இரண்டு நீதிபதிகள், மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர். இதையடுத்து, அதிக நீதிபதிகள் உடைய அமர்வில் வழக்கு மீண்டும் விசாரிக்கப்படும்.
கர்நாடகாவில், முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கல்வி நிறுவனங்களில் மாணவ – – மாணவியர் ஆடை அணிவதில் சில கட்டுப்பாடுகளை விதித்து, கடந்த பிப்ரவரியில் அரசாணை பிறப்பிக்கப் பட்டது.
‘சமத்துவம், ஒற்றுமை, பொது ஒழுங்கு ஆகியவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலான ஆடை அணியக் கூடாது’ என, அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.
இதற்கிடையே சில பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் மாணவியர், வகுப்பறைக்குள் ஹிஜாப் எனப்படும் தலை மற்றும் முகத்தை மூடும் துணியை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டது.
இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது; போராட்டங்களும் நடந்தன. இது தொடர்பான வழக்கை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம், ‘அரசாணை செல்லும்’ என தீர்ப்பு அளித்தது.
‘ஹிஜாப் அணிவது என்பது கட்டாய மத நடவடிக்கை அல்ல. சீருடைகள் அணிவது என்ற கட்டுப்பாடு ஏற்கக்கூடியதே’ என, கடந்த மார்ச் 15ல் அளித்த தீர்ப்பில் உயர் நீதிமன்றம் கூறியிருந்தது.
இதை எதிர்த்து முஸ்லிம் மாணவியர் உட்பட பலர், உச்ச நீதிமன்றத்தில் 26 வழக்குகள் தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை நீதிபதிகள் ஹேமந்த் குப்தா, சுதான்ஷு துலியா அமர்வு விசாரித்தன.
தொடர்ந்து, 10 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டு, கடந்த மாதம் 22ம் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. நீதிபதி ஹேமந்த் குப்தா, வரும் 16ல் ஓய்வு பெற உள்ளார்.
இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை அளித்துள்ளனர். இதையடுத்து, கூடுதல் நீதிபதிகள் உள்ள அமர்வு விசாரிக்க, தலைமை நீதிபதிக்கு அமர்வு பரிந்துரைத்து உள்ளது.
தீர்ப்பில் நீதிபதி ஹேமந்த் குப்தா கூறியுள்ள தாவது:
இந்த வழக்கில், 11 முக்கிய கேள்விகள் எழுந்தன. அரசியல் சாசனம் அளித்துள்ள உரிமைகள், மத உரிமைகள் குறித்தும் கேள்விகள் எழுந்தன.
அதுபோல, ஹிஜாப் அணிவது கட்டாய மத நடவடிக்கையா; வகுப்பறையில் அவற்றை அணிவதை உரிமையாக கேட்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இவற்றுக்கு கிடைத்த பதில்கள், மனுதாரர்களுக்கு சாதகமாக இல்லை. அதனால், இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மற்றொரு நீதிபதி சுதான்ஷு துலியா அளித்துள்ள தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:
நம் நாட்டில் ஏற்கனவே கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களில் மாணவியர் படிப்பதற்கு பல பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது. இந்நிலையில், நாம் அவர்களுக்கு நல்லது செய்கிறோமா என்பதே எனக்கு எழுந்த கேள்வி.
ஹிஜாப் அணிவது கட்டாய மத நடவடிக்கை அல்ல என்று முழுமையாக ஒதுக்கி விட முடியாது. இந்த விஷயத்தில், உயர் நீதிமன்றம் தவறான முடிவை எடுத்துள்ளது. மத சம்பிரதாயத்தை கடைப்பிடிப்பது என்பது அவரவர் விருப்பம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பு அளித்துள்ளதால், அதிக நீதிபதிகள் உள்ள அமர்வின் விசாரணைக்கு தலைமை நீதிபதி உத்தரவிடலாம்.
தற்போதைய தலைமை நீதிபதி யு.யு.லலித், வரும் நவ., 9ல் ஓய்வு பெறுகிறார். அதற்கு முன், புதிய அமர்வு அமைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தற்போதைய நிலையில், உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை ஏதும் விதிக்கப்படவில்லை. அதனால், கர்நாடக கல்வி நிறுவனங்களில், ஹிஜாப் அணிவதற்கான தடை தொடரும் என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்