வாஷிங்டன்: அமெரிக்கா வந்த பாகிஸ்தான் நிதியமைச்சர் இஷாக் தர்ரை பார்த்து, ” திருடன்” மற்றும் ” பொய்யர்” என அடையாளம் தெரியாத சிலர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியால் தவித்து வருகிறது. இதனையடுத்து சர்வதேச அமைப்புகளின் உதவியை அந்நாடு நாடி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியம் அமைப்பு நிர்வாகிகளை சந்தித்து பேச அந்நாட்டு நிதியமைச்சர் இஷாக் தர், அமெரிக்கா வந்தார்.
வாஷிங்டன் விமான நிலையத்திற்கு, உதவியாளர்களுடன் வந்த இஷாக் தர் வந்தார். அப்போது அங்கிருந்த அடையாளம் தெரியாத சிலர் , இஷாக் தர்ரை பார்த்து ” திருடன் மற்றும் பொய்யர் ” என திரும்ப திரும்ப சொல்லி கோஷம் போட்டனர்.
அப்போது, அவருடன் வந்த உதவியாளர் ஒருவர், போராட்டக்காரர்களை பார்த்து ஆபாசமாக திட்டினார். இதனை அங்கிருந்த சிலர் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர்.
அதில் ஒரு வீடியோவில், இஷாக் தர்ரை பார்த்து, ஒருவர், ‘நீங்கள் பொய்யர் என கோஷம் போடுகிறார். அதற்கு பதிலாக அமைச்சரும், அவரை பார்த்து நீங்கள் தான் பொய்யர் என சத்தமாக கூறும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பாகிஸ்தான் அமைச்சர்களுக்கு இந்த வகையில் வரவேற்பு கொடுப்பது இது முதல் முறையல்ல. அந்நாட்டு தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மரியம் அவுரங்கஜீப் கடந்த மாதம் லண்டன் சென்ற போது, சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல், பிரதமர் ஷெபாஷ் ஷெரீப் தலைமையிலான குழுவினர் 3 நாள் பயணமாக சவுதி அரேபியா சென்றிருந்தனர். மதீனாவுக்கு அவர்கள் சென்ற போது, அங்கு இருந்தவர்கள் அவர்களை பார்த்து ” திருடன் ” என திரும்ப திரும்ப சொல்லி கோஷம் போட்டனர். அந்த குழுவிலும் மரியம் அவுரங்கஜீப்பும் இருந்தார். இந்த சம்பவத்திற்கு, முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தான் காரணம் என குற்றம்சாட்டியிருந்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement