தீபாவளியன்று காலை பலர் வீடுகளிலும் சுடச் சுட இட்லியுடன் தவறாமல் நாட்டுக்கோழி குழம்பு மணக்கும். கிராமத்து ஸ்டைலில் அரைத்துவிட்ட நாட்டுக்கோழி குழம்பு தளதளக்க, ஆவி பறக்க இட்லி பரிமாறினால்… டஜன் கணக்கில் சாப்பிடுவோம்.
சொல்லும்போதே நாக்கில் எச்சில் ஊற வைக்கும் அந்த அரைத்துவிட்ட நாட்டுக்கோழி குழம்பை, கிராமத்து ஸ்டைலில் அம்மியில் அரைத்து, விறகடுப்பில் சமைத்து காட்டுகிறார் திருச்சியை மாவட்டம் மருதாண்டக்குறிச்சியை சேர்ந்த கோமதி அக்கா.
தேவையான பொருள்கள்
1. சின்ன வெங்காயம் – 100 கிராம்
2. தக்காளி – 2
3. கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிது
4. நாட்டுக்கோழி – அரை கிலோ
5. கல் உப்பு – தேவையான அளவு
6. மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
7. நல்லெண்ணெய் – தேவையான அளவு
8. பட்டை மற்றும் கிராம்பு
அம்மியில் அரைக்கத் தேவையான பொருள்கள்
1. தேங்காய் – 4 துண்டுகள்
2. சீரகம் – 1 டீஸ்பூன்
3. சோம்பு – 1 டீஸ்பூன்
4. மிளகு – 1 டீஸ்பூன்
5. காய்ந்த மிளகாய் – 10
6. வர கொத்தமல்லி – 2 டீஸ்பூன்
7. இஞ்சி மற்றும் பூண்டு
இவற்றில் இஞ்சி, பூண்டை மட்டும் தனியாகவும், மற்ற பொருள்கள் அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்தும் அம்மியில் அரைத்துக்கொள்ளவும்.
செய்முறை
மண்மணக்க ரெசிப்பி சொல்கிறார் கோமதி…
* ’’அரைக்கக் கொடுத்திருக்குற பொருளையெல்லாம் அம்மியில நல்லா அரைச்சு வழிச்சு எடுத்து வையுங்க.
* நாட்டுக்கோழிய எடுத்து நல்லா கழுவிக்கோங்க.
* விறகு வெச்சு அடுப்பை பத்தவையுங்க. தீ அதிகமாவும் இருக்க வேணாம், குறைவாவும் இருக்க வேண்டாம். சரியா எரியவிடுங்க.
* அடுப்புல, மண்சட்டி இருந்தா வையுங்க. இல்லாதவங்க பாத்திரத்தை வெச்சு, செக்குல ஆட்டுன நல்லெண்ணைய ஊத்துங்க.
* எண்ணெய் காய்ஞ்சதும், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை போட்டு தாளிங்க. அப்புறம், சின்னச் சின்னதா வெட்டின சின்ன வெங்காயத்தை கொட்டி, நல்லா வதக்குங்க.
* நல்லா வதங்கினதுக்கு அப்புறம், அம்மியில அரைச்சு வழிச்சு எடுத்து வெச்சிருக்கிற இஞ்சி, பூண்டை அதோட சேர்த்து, பச்சவாசம் போக நல்லா வதக்குங்க.
* நறுக்கி வெச்சிருக்கிற தக்காளிய சேர்த்து வதக்குங்க. இப்போ, கழுவிவெச்சிருக்கிற நாட்டுக்கோழிய அதுல சேர்த்துக் கிளறிவிடுங்க.
* நல்லா கிளறுனதுக்கு அப்புறம், அம்மில அரைச்சு வெச்சிருக்கிற மசாலாவை அதுல கொட்டி, கிளறுங்க.
* ருசிக்குத் தக்கன உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, நல்லா கிளறிவிட்டு, மூடியப் போட்டு வேகவிடுங்க.

* பதமா எரியுற தீயில, மசாலாவோட சேர்ந்து நாட்டுக்கோழிக் கறி அரை மணி நேரம் நல்லா வேகட்டும்.
* இடையில, 10 நிமிசத்துக்கு ஒருமுறை கிளறிவிடுங்க. அரை மணி நேரத்துல மூடியை திறந்து பார்த்தா, தளதளனு கொழம்பு மிதக்கும், பூப்பூவா கறி வெந்திருக்கும், கமகமனு மணக்கும்.
நல்லா சுடச்சுட இட்லி சுட்டு, அது முங்குற அளவுக்கு நாட்டுக்கோழி கொழம்ப ஊத்தி பிசஞ்சுவிட்டு சாப்பிட்டா… அதுதானே தீபாவளி ருசி?!’’