ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் இல்லம் தேடிக் கல்வி மையங்களில் பணிபுரியும் தன்னார்வலர்கள் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிபுரிந்து வருவது அனைவரின் பாராட்டுகளையும் பெற்று வருகிறது. மாணவர்கள் மீது கொண்டுள்ள அன்பு மற்றும் அக்கறையால் முதல் பருவத் தேர்வு விடுமுறையிலும், அவர்களை கல்வி சார்ந்த செயல்பாடுகளிலும் ஈடுபடச் செய்ய வேண்டும் என்பதற்காக அறிவுசார் சுற்றுலா, அரசு அலுவலகப் பணி நடைமுறை அறிதல், இன்பச்சுற்றுலா என ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் மாணவர்களுக்குப் பல்வேறு சமூக சிந்தனை நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.

இதில் முதல் குழுவாக, ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருமலாபுரம் மையத்தில் இல்லம் தேடிக்கல்வி திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வலர்கள், பாடம் தொடர்புடைய குகைக்கோயிலுக்கு மாணவர்களை அழைத்துச் சென்று மகிழ்ச்சியூட்டினர். இரண்டாவது குழுவாக கொத்தங்குளம், படிக்காசுவைத்தான்பட்டி பகுதி தன்னார்வலர்கள் வங்கி மற்றும் ஊராட்சி மன்ற அலுவலகத்துக்கு மாணவர்களை அழைத்துச் சென்று அரசு அலுவலகங்களில் பணி மற்றும் அதன் நடைமுறைகள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ள ஏற்பாடு செய்தனர்.
மூன்றாம் குழுவாக லட்சுமியாபுரம் குறுவளமையத்தின் தன்னார்வலர் குழு தலைவர் சிவகாமி, அப்பகுதியில் கல்வி மையங்களில் பயிலும் மாணவர்களில், இதுவரை ரயிலை பார்க்காத மற்றும் ஒருமுறைகூட ரயிலில் பயணம் செய்யாத மாணவ மாணவிகளைத் தேர்வுசெய்து இன்பச்சுற்றுலாவாக சொந்தச் செலவில் ரயிலில் அழைத்துச் சென்று மாணவர்களை குஷிப்படுத்தினார்.
இதற்காக தேர்வுசெய்யப்பட்ட 18 மாணவ-மாணவிகளை படிக்காசுவைத்தான்பட்டி மையத்தின் தன்னார்வலர் மகாலட்சுமி, கலங்காபேரிபுதூர் குறுவளமையங்களின் தன்னார்வலர்கள் தங்கம், சசிகலா, சந்திரபதனி, கிருஷ்ணன்கோவில் தெரு மையத்தின் தன்னார்வலர் நர்மதா ஆகியோர் ஒருங்கிணைத்து ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையம் அழைத்து வந்தனர். அங்கிருந்து, இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர் மற்றும் தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் ஞானராஜ் தலைமையில் மதுரை – செங்கோட்டை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் மாணவர்களை செங்கோட்டைக்கு சுற்றுலா அழைத்துச் சென்றனர். ரயில் பயணத்தின்போது, ரயிலில் சக பயணிகளை மாணவ, மாணவிகள் வரவேற்றனர்.
தொடர்ந்து செங்கோட்டை சென்றடைந்த மாணவ,மாணவிகளுக்கு தேநீர், உணவு உள்ளிட்டவற்றை சொந்த செலவில் வழங்கிய தன்னார்வலர்கள், சிறிது நேர ஓய்வுக்குப் பின் மீண்டும் அதே ரயிலில் மாணவர்களை ஸ்ரீவில்லிபுத்தூருக்கு அழைத்து வந்தனர். பள்ளியின் பருவத்தேர்வு விடுமுறையைக்கூட மாணவர்கள் பயனுள்ளதாகக் கழிக்கும் விதம் இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்கள், அவர்கள் மீது அக்கறை எடுத்து செயல்பட்டது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இந்நிகழ்வில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட உதவித் திட்டஅலுவலர் ஜோதிமணி ராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.