
மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தின் சில்ஹெட் நகரில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீகரம், மலேசியா ஆகிய 7 அணிகள் ரவுண்டு ராபின் லீக் சுற்றில் மோதின.
இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடித்த இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தாய்லாந்து ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. நடப்பு சாம்பியன் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீகரம், மலேசியா ஆகிய அணிகள் வெளியேறின.
இந்த தொடரின் அரையிறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றது. முதலாவது அரையிறுதியில் 6 முறை சாம்பியனான இந்தியா, கத்துக்குட்டி அணியான தாய்லாந்தை எதிர்கொண்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 148 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக தொடக்க வீராங்கனை ஷபாலி வர்மா 42 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருக்கு அடுத்தபடியாக கேப்டன் ஹர்மன்ப்ரீத் 36 ரன்கள் அடித்தார்.
149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய தாய்லாந்து அணி இந்திய அணியின் அசத்தலான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்தது. இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்களை இழந்து 74 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 74 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 8-வது முறையாக இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
இதை தொடந்து நடைபெற்ற மற்றொரு அரையிறுதி போட்டியில் இலங்கை – பாகிஸ்தான் அணிகள் விளையாடின. இதில் இலங்கை முதலில் பேட் செய்து 122 ரன்கள் எடுத்தது. அதை விரட்டிய பாகிஸ்தான் அணி 121 ரன்கள் எடுத்தது. ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிப் பெற்றுள்ளது.
இரு அணிகளும் நாளை 15-ம் தேதி சில்ஹெட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் விளையாடுகின்றன. இந்தத் தொடரில் இரு அணிகளும் முதல் சுற்றில் நேருக்கு நேர் விளையாடி இருந்தன. அதில் இந்தியா 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இலங்கையை வீழ்த்தி 7-வது முறையாக கோப்பையை இந்திய அணி முத்தமிடுமா என இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.