முசாபர்நகர்: முசாபர்நகர் மாவட்ட பள்ளிகளில் ஆசிரியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் ஆடைகளை அணிந்து கொண்டு வரக்கூடாது என்று கல்வித்துறை அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு என்று தனியாக சீருடை இருந்தாலும், ஆசிரியர்கள் தங்களுக்கு ஏற்ற வகையில் ஆடைகளை அணிந்து பள்ளிக்கு வருகின்றனர்.
இந்நிலையில் முசாபர்நகர் மாவட்ட கல்வி அதிகாரி கஜேந்தர் சிங் வெளியிட்ட சுற்றறிக்கையில், ‘அனைத்து அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், மாணவர்களிடையே தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் ஆடைகளை அணிந்து கொண்டு வரக்கூடாது. பள்ளிகளில் ஆய்வு செய்த போது, சில ஆசிரியர்கள் ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் அணிந்து கொண்டு மாணவர்களுக்கு வகுப்பு எடுப்பதை நேரில் பார்த்தேன்.
இதுமிகவும் தவறான செயல்; ஆசிரியர்கள் ஆடைக் கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். விதிமுறைகளை மீறும் ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மாணவர்களுக்கு மட்டும் ஒழுக்கத்தை கற்றுக் கொடுத்தால் மட்டும் போதாது, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களும் ஒழுக்கத்தை பின்பற்ற வேண்டும்.
ஆசிரியர்கள் கண்ணியமான ஆடைகளை அணிந்தால் தான், அது மாணவர்களிடையே நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த உத்தரவு பெண் ஆசிரியர்களுக்கும் பொருந்தும். அவர்கள் புடவை அல்லது சல்வார்-கமீஸ் அணியலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.