திருப்பதி :திருமலை ஏழுமலையானை தரிசிக்க பக்தர்கள் 30 மணிநேரத்துக்கு மேல் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
திருமலையில் கடந்த நான்கு நாட்களாக அதிகமாக இருந்த பக்தர்களின் கூட்டம் தற்போது சற்று குறைந்து காணப்படுகிறது. எனவே, நேற்று காலை 32 காத்திருப்பு அறைகளை கடந்து சீலாதோரணம் பகுதி வரையில் வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.
அதனால் தர்மதரிசனத்திற்கு 30 மணிநேரமும், விரைவு தரிசனத்திற்கு 5 முதல் 6 மணிநேரமும் தேவைப்படுகிறது.காத்திருப்பு அறைகள் மற்றும் தரிசன வரிசைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.
திருமலையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால் தரிசனவரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் மழையில் நனைந்துக் கொண்டே காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
ரூ.5.65 கோடி காணிக்கை
திருமலை ஏழுமலையானை தரிசனம் செய்த பின், பக்தர்கள் தாங்கள் முடிந்து வைத்த வேண்டுதல் காணிக்கைகளை உண்டியலில் செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறு பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகளை, தேவஸ்தானம் காணிக்கை கணக்கிடும் பிரிவில் தினசரி சில்லரை மற்றும் ரூபாய் நோட்டுகள், வெளிநாட்டு பணங்கள் என பிரித்து கணக்கிட்டு மொத்த தொகையை வங்கிகளில் வரவு வைத்து வருகிறது.
சராசரியாக உண்டியல் வருவாய் தினசரி 2 – 3 கோடி ரூபாய் வரை வசூலாகி வருவது வழக்கம். தற்போது பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் உண்டியல் வருவாய் 3 – 4 கோடி ரூபாய் வரை வசூலாகி வருகிறது.
இந்நிலையில் பக்தர்கள் நேற்று முன்தினம் உண்டியலில் செலுத்திய காணிக்கைகளை தேவஸ்தானம் கணக்கிட்டதில் 5 கோடியே 65 லட்சம் ரூபாய் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement