உலகம் முழுவதும் ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் மாதம் `மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு’ மாதமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 2020-ம் ஆண்டு கணக்கின்படி, இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்கள் தங்களின் மார்பகங்களை சிகிச்சையின்போது இழக்க நேரிடும்.

இவர்களுக்கு உதவும் வகையில், `சாயிஷா இந்தியா’ என்ற அமைப்பு, மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சிலிக்கான் அல்லாத செயற்கை மார்பகங்களை இலவசமாக வழங்கி வருகிறது.
இந்த முன்னெடுப்பைக் குறித்து சாயிஷா இந்தியா அமைப்பின் தன்னார்வலர்களான ஸ்ரீவித்யா கோபிநாத் மற்றும் சக்தி ஹரிஹரன் கூறியதாவது, “2018-ம் ஆண்டு, சாயிஷா இந்தியா என்ற அமைப்பு மும்பையில் உள்ள ஜெயஸ்ரீ ரதன், குமார் தம்பதியினரால் தொடங்கப்பட்டது. சாயிஷா என்றால் ‘அர்த்தமுள்ள வாழ்க்கை’ என்று பொருள். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் அர்த்தமுள்ள வாழ்க்கையை வழங்கவே இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. இதன் கிளைகள் இந்தியாவில் சென்னை, குஜராத், பெங்களூரு போன்ற நகரங்களிலும், UAE, ஓமன் போன்ற வெளிநாடுகளிலும் இருக்கிறது.

நாங்கள் செய்யும் நாக்கர்ஸ் (செயற்கை மார்பகங்கள்) 100% மென்மையான பருத்தியால் கைகளால் பின்னப்பட்டவை. அமெரிக்க நிறுவனமான knittednockers.org-ஐ பின்பற்றி இவை பின்னப்படுகின்றன. மேலும் அவர்களுடன் நாக்கர்ஸ் தயாரிக்கும் முறைக்கு பதிவு செய்து உள்ளோம். சாயிஷா இந்தியா தயாரிக்கும் ஒவ்வொரு நாக்கர்ஸும் இயந்திரமில்லாமல் கைதேர்ந்த பின்னல் கலைஞர்கள் மற்றும் தன்னார்வலர்களால் பின்னப்படுகின்றன.
சிலிக்கானால் செய்யப்பட்ட செயற்கை மார்பகங்களால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன என அவற்றைப் பயன்படுத்தும் பயனாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். நாக்கர்ஸை 4,000-க்கும் மேற்பட்ட பெண்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை நாக்கர்ஸ் குறித்து எந்தப் புகாரும் எழவில்லை. நாக்கர்ஸை 100% மென்மையான பருத்தியில் பின்னுவதால் அரிப்பு மற்றும் உறுத்தல் ஏற்படுவது இல்லை. மேலும் சருமத்தில் எழும் வியர்வையை அது உறிஞ்சிக் கொள்ளும்.

இவை A என்ற அளவு முதல் EE என்ற அளவு வரை இருக்கின்றன. அவரவர் பயன்படுத்தும் பிரா அளவுக்கேற்ப அவர்களுக்கு நாக்கர்ஸ் அனுப்பப்படும். இவற்றை Mastectomy பிரா அல்லது பிளவுஸில் பொருத்திக் கொள்ளலாம். இது அவர்களுடைய உண்மையான மார்பகங்களைப் போலவே காட்சியளிக்கும். எத்தனை நாள்கள் ஆனாலும் இதன் வடிவம் மற்றும் அமைப்பு மாறாது.
நாக்கர்ஸை பராமரிப்பதும் சுலபமானது தான். கைகளாலேயே துவைத்துக் கொள்ளலாம். நாக்கர்ஸ் பருத்தி நூலால் பின்னப்பட்டிருப்பதால், கிளிப் போடாமல் காய வைப்பது அவசியம்.
நாங்கள் ஒவ்வோர் ஆர்டருக்கும் இரண்டு நாக்கர்ஸ் வழங்குவோம். இதனால் தினமும் துவைத்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது இரண்டு ஆண்டுகளுக்கு கண்டிப்பாக நீடிக்கும். அதன்பிறகு மீண்டும் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம்.

நாக்கர்ஸ் ஆர்டர் செய்ய புற்றுநோய் அறுவை சிகிச்சை நடந்து 2 வாரங்கள் முடிந்திருக்க வேண்டும், தழும்புகள் ஆறி இருக்க வேண்டும் மற்றும் செயற்கை மார்பகங்கள் பொருத்த மருத்துவரிடம் இருந்து அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
நாக்கர்ஸ் ஆர்டர் செய்ய பிரா அளவு மிக முக்கியம். இந்திய தபால்துறை மூலமே நாக்கர்ஸை அனுப்புவதால் பின்கோடு அவசியம்.
நாக்கர்ஸ் ஆர்டர் செய்ய [email protected] என்ற இணைய முகவரியிலோ, @saaishaindia என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திலோ, saaishaindia என்ற முகவரி பக்கத்திலோ அணுகலாம்.