சேலம் : சேலத்தில் நேற்று மாலை பெய்த கனமழையால் மாநகர பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நீரில் மூழ்கிய வாகனங்கள் பழுதடைந்து சாலைகளில் நின்றதால் மக்கள் சிரமத்தில் ஆழ்ந்தனர். குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. சேலத்தை பொறுத்தமட்டில் கடந்த 11ம் தேதி இரவு விடிய, விடிய பலத்த மழை கொட்டியது.
இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே சேலத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணியளவில் பலத்த மழை பெய்தது. இம்மழை பல மணிநேரம் நீடித்தது. பலத்த மழையால் திருமணிமுத்தாறு ராஜாவாய்க்கால் நிரம்பி மழைநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. சேலம் மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கிச்சிப்பாளையம் மெயின் ரோட்டில் காந்தி சிலை துவங்கி கருவாட்டு பாலம் முதல் இடுப்பளவுக்கு தண்ணீர் தேங்கி நின்றது.
அந்தவழியாக வந்த வாகனங்களில் வந்தவர்கள், அப்படியே ஸ்தம்பித்து நின்றனர். சிலரது வாகனங்களில் மழைநீர் புகுந்ததால் பழுதாகி அப்படியே நின்றது. இந்த மழையால் பாதசாரிகள், சாலையோர வியாபாரிகள், பள்ளி மாணவர்கள், மாலையில் பணி முடிந்து வீடு திரும்பியவர்கள் என்று அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர்.
இதேபோல் பச்சப்பட்டி, நாராயணநகர், சித்தேஸ்வரா பகுதிகளில் பல இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். இதேபோல் 4 ரோடு, 5 ேராடு, கருங்கல்பட்டி, களரம்பட்டி, பழைய பஸ்ஸ்டாண்ட், புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் மழைநீர் தேங்கியது. ஏற்காட்டில் பெய்த பலத்த மழையால் மலைப்பாதையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் பனி ெபாழிவு ஏற்பட்டது. வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை எரியவிட்டாறு வாகனத்தை இயக்கினர்.
மலைப்பாதையில் ஆங்காங்கே நீர்வீழ்ச்சி போல் மழைநீர் கொட்டியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். இதேபோல் சேலம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்ததது. பல இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழையால் நேற்று மாலையில் சீதோஷ்ணநிலையில் மாற்றம் ஏற்பட்டு குளிர் நிலவியது.