திருப்பதி,:நாளை புரட்டாசி சனிக்கிழமை இறுதி வாரம் என்பதால், திருமலை ஏழுமலையானை தரிசிக்க நேற்று முதலே பக்தர்கள் குவிய துவங்கினர்.
ஆந்திர மாநிலம் திருமலையில் கடந்த வாரம் போலவே, இந்த வாரமும் புரட்டாசி இறுதி சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் குவியத் துவங்கியுள்ளது.
நேற்று காலை 32 காத்திருப்பு அறைகளை கடந்து சீலாதோரணம் பகுதி வரையில் வெளியில் உள்ள தரிசன வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர்.
இதனால் தர்ம தரிசனத்திற்கு 30 மணிநேரமும், 300 ரூபாய் விரைவு தரிசனத்திற்கு ஐந்து முதல் ஆறு மணிநேரமும் தேவைப்படுகிறது.
தற்போது திருமலையில் அவ்வப்போது மழை பெய்து வருவதால், தரிசன வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் மழையில் நனைந்துக் கொண்டே காத்திருக்கும் நிலை உள்ளது.
நேற்று முன்தினம் 79 ஆயிரத்து 370 பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்தினர்; 39 ஆயிரத்து 199 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.
திருப்பதியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ், சீனிவாசம் உள்ளிட்ட இடங்களில் வழங்கப்பட்டு வரும் சர்வ தரிசன டோக்கன்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதால் ஏழுமலையானுக்கு இரவு 11.30 மணிக்கு ஏகாந்த சேவை நடத்தி 12:00 மணிக்கு கோவில் நடை சாற்றப்படுகிறது.
தரிசன அனுமதியுள்ள பக்தர்கள், 24 மணிநேரமும் அலிபிரி நடைபாதை வழியாகவும், காலை 6:00 மணிமுதல் மாலை 6:00 மணிவரை ஸ்ரீவாரிமெட்டு நடைபாதை வழியாகவும் திருமலைக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், 12 வயதிற்கு மேற்பட்ட சிறார்களுக்கும், 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களுக்கும் தரிசன டிக்கெட் இருந்தால் ஏழுமலையானை தரிசிக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement