தேர்தல் பத்திர திட்டத்தில் முறைகேடு இல்லை திட்டவட்டம் ! உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்| Dinamalar

புதுடில்லி ‘தேர்தல் பத்திர திட்டம் முற்றிலும் வெளிப்படைத் தன்மையுடன் நடத்தப்படுகிறது. இதன் வாயிலாக, கறுப்பு பணமோ, கணக்கில் வராத பணமோ மாற்றப்பட வாய்ப்பே இல்லை’ என, உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதில் வெளிப்படை தன்மையை கொண்டு வருவதற்காக, தேர்தல் பத்திரங்கள் விற்பனை திட்டம், 2018ல் கொண்டு வரப்பட்டது.

இதில், தனி நபரோ அல்லது நிறுவனமோ தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிக்கு நன்கொடை வழங்க, அக்கட்சியின் தேர்தல் பத்திரத்தை பணம் கொடுத்து வாங்க வேண்டும். இந்த பத்திரங்களை, எஸ்.பி.ஐ., எனப்படும், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா விற்பனை செய்கிறது.

முறையான அறிவிப்புக்கு பின், 10 நாட்களுக்கு தேர்தல் பத்திர விற்பனையை எஸ்.பி.ஐ., நடத்தி வருகிறது.

இந்த தேர்தல் பத்திர விற்பனை ஜனநாயக நடைமுறைக்கு எதிராக நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி, இந்திய கம்யூனிஸ்ட் உட்பட சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, தன்னார்வ தொண்டு நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பிரசாந்த பூஷண் வாதிடுகையில், ”ஒவ்வொரு மாநில சட்டசபை தேர்தலுக்கு முன்னதாகவும் தேர்தல் பத்திரங்களின் விற்பனை நடக்கின்றன. ஜனநாயகத்தை பாதிக்கும் இந்த விவகாரத்தை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்,” என்றார்.

மற்றொரு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், ”இந்த விவகாரம் தொடர்பான விசாரணை அதிக நீதிபதிகள் அடங்கிய பெரிய அமர்வுக்கு மாற்றப்பட வேண்டும்,” என, கோரிக்கை விடுத்தார். ‘இது தொடர்பாக, டிச., 6ல் விசாரித்து முடிவெடுக்கப்படும்’ என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதிட்டதாவது:

அரசியல் கட்சிகள் நன்கொடை பெறும் நடைமுறை முற்றிலும் வெளிப்படை தன்மையுடன் தற்போது நடக்கிறது. அது குறித்து ஒவ்வொரு கட்டங்களாக இந்த நீதிமன்றத்தில் விவரிக்கிறோம்.

தேர்தல் பத்திர விற்பனை வாயிலாக, கறுப்பு பணத்தையோ, கணக்கில் வராத பணத்தையோ மாற்றிட வாய்ப்பே இல்லை. எனவே, இது ஜனநாயகத்தை பாதிக்காது.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.