புதுடெல்லி: “பிரதமர் மோடியின் தாயை அவமதித்தவர்களுக்கு வரும் தேர்தலில் குஜராத் மக்கள் தக்க பாடம் கற்பிப்பார்கள்” என்று மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் தலைவர் கோபால் இடாலியா மோடியின் தாயை பழித்து வெளியிட்ட வீடியோ குறித்தது அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி வெள்ளிக்கிழமை ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமரின் தாயை அவமானப்படுத்தினால் அது உங்களுக்கு அரசியல் ஆதாயத்தைத் தேடித் தரும் என்று நினைத்தால் அது முற்றிலும் தவறானது. உங்களின் இந்த தவறுக்காக குஜராத்தும், குஜராத் மக்களும் மாநிலத் தேர்தலில் தகுந்த அரசியல் பாடத்தை புகட்டுவார்கள்.
அரசியலில் ஈடுபடாத ஒரு 100 வயதான முதிய பெண்மணியை அவமானப்படுத்தும் படி பேசியிருப்பதை மன்னிக்கவே முடியாது. அந்த தாய் செய்த ஒரே குற்றம் உங்களின் (அரவிந்த் கேஜ்ரிவால்) அரசியல் திட்டங்களைத் தடுத்து நிறுத்தம் நரேந்திர மோடியை பெற்றது தான்.
அரவிந்த் கேஜ்ரிவாலின் அறிவுறுத்தலின் பெயரில் தான் அக்கட்சியின் குஜராத் தலைவர் கோபல் இடாலியா, மோடியின் தாயாரைப் பற்றி இப்படி தவறாக பேசியுள்ளார். மற்றொரு வீடியோவில் பெண்களை கோவிலுக்கு போக வேண்டாம் எனக் கூறும் இடாலியா, இந்து சமூகத்தையும், கோயிலுக்குச் செல்லும் பெண்களையும் இழிவுபடுத்தி பேசியிருக்கிறார்.
அரவிந்த கேஜ்ரிவாலின் இந்த புதிய இழிவான நடவடிக்கைகள் எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. ஆனால் அவர்கள் குஜராத் மக்கள், பெண்களை குறிப்பாக தாய்மார்களை தெய்வமாக மதிப்பவர்கள் என்பதை மறந்து விட்டார்கள். அவர்களின் இந்த நடவடிக்கை மாநிலத் தேர்தலில் அவர்களுக்கு அழிவையே தேடித் தரும். தான் செய்த தவறுகளை மறைக்கும் விதமாக கோபால் இடாலியா இப்போது தனது சமூகத்திற்கு பின்னால் ஒளிந்துகொள்கிறார்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் தலைவர் கோபால் இடாலியா வீடியோ ஒன்றில் பிரதமர் மோடி பற்றி தரக்குறைவாக பேசியுள்ளார் என்று அவருக்கு டெல்லியில் உள்ள தேசிய பெண்கள் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இதற்காக கோபால் இடாலியா வியாழக்கிழமை டெல்லி வந்து தேசிய பெண்கள் ஆணைய விசாரணைக்கு ஆஜரானார். அங்கு கோபால் இடாலியாவை டெல்லி போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ‘‘கோபால் இடாலியா மீது தேசிய பெண்கள் ஆணையம் புகார் கொடுத்தது. அதனால் அவரை விசாரணைக்காக அழைத்துச் செல்கிறோம்’’ என்றனர். பின்னர் 3 மணி நேர தீவிர விசாரணைக்குப் பின்னர் அவரை போலீஸார் விடுவித்தனர்.
கைதுக்கு பின்பு ட்விட்டரில் நேற்று தகவல் தெரிவித்த கோபால் இடாலியா, ‘‘என்னை சிறைக்கு அனுப்புவேன் என தேசிய பெண்கள் ஆணைய தலைவி ரேகா சர்மா மிரட்டுகிறார். படிதார் சமூகத்தை பாஜக வெறுக்கிறது. நான் சர்தார் படேலின் வழித்தோன்றல். நான் சிறையைக் கண்டு அஞ்சவில்லை. என்னை சிறையில் போடுங்கள். தேசிய பெண்கள் ஆணையத்தினர் போலீஸை வைத்து என்னை மிரட்டுகின்றனர்’’ எனத் தெரிவித்திருந்தார்.