புதுடெல்லி: ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் தலைவர் கோபால் இடாலியா. இவர் வீடியோ ஒன்றில் பிரதமர் மோடி பற்றி தரக்குறைவாக பேசியுள்ளார். அவருக்கு டெல்லியில் உள்ள தேசிய பெண்கள் ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. இதற்காக கோபால் இடாலியா நேற்று டெல்லி வந்து தேசியபெண்கள் ஆணைய விசாரணைக்கு ஆஜரானார். அங்கு கோபால் இடாலியாவை டெல்லி போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறு கையில், ‘‘கோபால் இடாலியா மீது தேசிய பெண்கள் ஆணையம் புகார் கொடுத்தது. அதனால் அவரை விசாரணைக்காக அழைத்துச் செல்கிறோம்’’ என்றனர். பின்னர் 3 மணி நேர தீவிரவிசாரணைக்குப் பின்னர் அவரை போலீஸார் விடுவித்தனர். சூரத்தில் கடந்த திங்கட்கிழமை பேட்டியளித்த கோபால், ‘‘நான் படிதார் போராட்டத்தில் தொடர் புடையவன் என்பதால், தொடர்ந்து தாக்கப்படுகிறேன். பாஜக, படேல் சமூகத்தினர் உள்ள கட்சிக்கு எதிரானது’’ என கூறினார்.
கைதுக்கு பின்பு ட்விட்டரில் நேற்று தகவல் தெரிவித்த கோபால்இடாலியா, ‘‘என்னை சிறைக்கு அனுப்புவேன் என தேசிய பெண்கள் ஆணைய தலைவி ரேகா சர்மா மிரட்டுகிறார். படிதார் சமூகத்தை பாஜக வெறுக்கிறது. நான் சர்தார் படேலின் வழித்தோன்றல். நான் சிறையை கண்டு அஞ்சவில்லை. என்னை சிறையில் போடுங்கள். தேசிய பெண்கள் ஆணையத்தினர் போலீஸை அழைத்து என்னைமிரட்டுகின்றனர்’’ என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ள டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவருமான அர்விந்த் கேஜ்ரிவால், ‘‘ஏன் ஒட்டு மொத்த பாஜகவும், கோபால் இடாலியாவை தொந்தரவு செய்கிறது?’’ என கேள்வி எழுப்பியுள்ளார்.