
கேரளா மாநிலம் பத்தினம்திட்டா அருகே உள்ள மலையாளபுழா பகுதியில் வசந்தி அம்மா மடத்தில் பெண் சாமியார் ஷோபனா (52) வசித்து வருகிறார். இங்கு கடந்த பல வருடமாக மந்திரவாதங்கள் ஷோபனா தலைமையில் நடைபெற்று வந்துள்ளது. இந்த மந்திரவாதம் செய்யும் போது ஷோபனாவுக்கு தெரிந்த சிறுவர்- சிறுமிகளை பயன்படுத்தி கொள்வது வழக்கம்.
அப்படி மந்திரவாதம் செய்யும் போது சிறுவர்- சிறுமிகள் மயங்கி விழ வைத்து உள்ளார். மந்திரவாதத்தில் ஈடுபடும் போது இவர் பலத்த குரல் எழுப்பி சிறுவர்களை பயமுறுத்தி உள்ளார். இதனால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் போலீசார் யாரும் இதை கண்டுகொள்ளவில்லை.

இந்த நிலையில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் நடந்த நரபலி சம்பவத்தையொட்டி கடந்த இரு நாட்களுக்கு முன்பு பெண் சாமியார் ஷோபனா மீது மீண்டும் பொதுமக்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் பத்தினம்திட்டா போலீஸ் அதிகாரிகள் நேற்று காலை மடத்துக்கு சென்று ஷோபனாவிடம் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் சிறுவர்-சிறுமிகளை பூஜை செய்ய உதவியாக பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து பெண் சாமியார் ஷோபானா மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். மேலும் மடத்தில் இருந்த சிறுவர்-சிறுமிகள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

இதுதொடர்பாக பெண் சாமியாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு உள்ளார்கள். அதனால் இந்த பெண் சாமியார் ஷோபனாவும், சிறுவர்-சிறுமிகளை நரபலி கொடுப்பதற்காக பூஜைகள் நடத்தினாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டு உள்ளார்கள். இந்நிலையில் பெண் சாமியார் நடத்தி வந்த மடத்தை பொதுமக்கள் சூறையாடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.