இந்தி எதிர்ப்பில் எப்போதும் உறுதி: கெத்து காட்டும் உதயநிதி ஸ்டாலின்

இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம். அதிலிருந்து நாங்கள் சற்றும் விலகமாட்டோம், விட்டுக் கொடுக்கமாட்டோம் என்று கூறியுள்ளார்

இளைஞரணிச் செயலாளர் உதயநிதி

.

ஒன்றிய அரசின் இந்தி திணிப்பு திட்டத்தையும், ஒரே பொது நுழைவுத் தேர்வு திட்டத்தையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி திமுக இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திமுக இளைஞர் அணிச் செயலாலர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், “மத்திய.., ஒன்றிய என்று கூறினால்தான் அவர்களுக்கு கோபம் வரும், அதனால் அப்படியே சொல்வோம். ஒன்றிய பிரதமர் மோடி அவர்களே, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே, நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பதுபோல, முன்புபோல இங்கு நடந்துகொண்டிருப்பது அதிமுக ஆட்சி இல்லை. இப்போது முதல்வராக இருப்பவர், எடப்பாடி பழனிசாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ அல்ல. தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பவர், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

இப்போது வெறும் ஆர்ப்பாட்டம்தான் நடத்தியிருக்கிறோம். இதை போராட்டமாக மாற்றுவதா வேண்டாமா என்பது உங்கள் கையில்தான் உள்ளது. திமுகவின் முக்கியமான கொள்கை இந்தி எதிர்ப்பு, இந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம். அதிலிருந்து நாங்கள் சற்றும் விலகமாட்டோம், விட்டுக் கொடுக்கமாட்டோம். அது எங்கள் மாநில உரிமை.

நாங்கள் எதிர்க்கட்சியாக இருந்தாலும் சரி, ஆளுங்கட்சியாக இருந்தாலும் சரி எங்கள் தலைவர் அதனை விட்டுக்கொடுக்கமாட்டார். காரணம் நாங்கள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் வந்தவர்கள். இந்தி திணிப்பை எதிர்த்து ஆட்சியில் அமர்ந்தது திமுக.

தற்போது ஆளுங்கட்சியாக இருப்பதால், ஒருநாள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம், கூடினோம், கலைந்து சென்றோம் என்று கண்டிப்பாக இருக்கமாட்டோம். நீங்கள் எந்த வழியில் இந்தி திணிப்பை தமிழகத்திற்குள் கொண்டு வந்தாலும் ” இந்தி தெரியாது போடா” என்பதை எப்போதுமே சொல்லிக் கொண்டேயிருப்போம்.

3 மொழிப்போர்களை சந்தித்தது திமுக. அதில் இரண்டை நடத்தியது திமுகவின் மாணவர் அணிதான். தற்போது மாணவர் அணியுடன் இளைஞர் அணியும் சேர்ந்து இந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் களமிறங்கியிருக்கிறோம். இந்த இரு அணிகளும் இணைந்து கடந்த நான்கு ஆண்டுகளில் எடுத்த அனைத்து போராட்டங்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம். இந்த போராட்டத்திலும் எங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

முதல்கட்டப் போராட்டத்தை கலைஞர் அவர்கள் கட்டிக் கொடுத்த வள்ளுவர் கோட்டத்தில் நடத்தியிருக்கிறோம். நீங்கள் இந்தி திணிப்பை கையில் எடுத்தால், அடுத்தக்கட்ட போராட்டம் தமிழகத்தில் மட்டும் நடக்காது, தலைவரின் ஆணையைப் பெற்று டெல்லியில் வந்து போராட்டம் நடத்துவோம்.

தமிழக மக்கள் என்றும் உங்களுடைய இந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள். 2019 மக்களவைத் தேர்தலில் பாசிச பாஜகவை எப்படி ஓடஓட விரட்டி அடித்தோமோ 2024 தேர்தலிலும் பாசிச பாஜகவை தமிழக மக்கள் விரட்டியடிப்பார்கள். அண்ணன் தயாநிதி மாறன் கூறியதைப் போல, 2024 தேர்தல் பிரச்சாரத்துக்கு இது சிறந்த துவக்கமாக இது இருக்கும்” என்று கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.