வாஷிங்டன், :”உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று பாகிஸ்தான். அந்த நாடு, எந்தவிதமான ஒருங்கிணைப்பும் இல்லாமல் அணு ஆயுதங்களை வைத்துள்ளது,” என, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடந்த ஜனநாயக கட்சியின் எம்.பி.,க்கள் பிரசார குழுவின் வரவேற்பு நிகழ்ச்சியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியதாவது:
சீன அதிபர் ஜிங்பிங், தான் விரும்புவதை செய்ய வேண்டும் என நினைக்கிறார். ஆனால், அதில் மிகப் பெரிய பிரச்னைகள் உள்ளன.
இந்த நேரத்தில் ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்பதையும் நாம் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.
ஒரு முக்கியமான விஷயத்தை கூற விரும்புகிறேன். உலகின் மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று பாகிஸ்தான்.
எந்தவிதமான ஒருங்கிணைப்பும், ஒழுங்கின்மையும் இல்லாமல் அணு ஆயுதத்தை அந்த நாடு வைத்துள்ளது.
அதேநேரத்தில் நமக்கு சில நல்ல வாய்ப்புகள் உள்ளன. 21ம் நுாற்றாண்டில் சிறந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் நம்மிடம் உள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் வெளியுறவு கொள்கை குறித்து பேசிய பைடன், சீனாவையும், ரஷ்யாவையும் கடுமையாக தாக்கிப் பேசினார்.
பாகிஸ்தானையும் ஆபத்தான நாடு என அவர் குறிப்பிட்டுள்ளது, அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்த முயற்சிக்கும் பாக்., பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement