எண்ணும் எழுத்தும் திட்டம்: நடனமாடி அசத்திய அரசு பள்ளி ஆசிரியை!

கொரோனா காலகட்டத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்ததால் பள்ளி மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை. வகுப்புகளை ஆன்லைனில் கவனித்து வந்தனர். இந்த சூழ்நிலையால் ஏற்பட்டிருந்த கற்றல் இடைவெளியை போக்கும் விதமாக தமிழ்நாட்டில் எண்ணும் எழுத்தும் திட்டம், பள்ளிக்கல்வித்துறையால் தொடங்கப்பட்டது.

எண்ணும் எழுத்தும் திட்டத்தின் முக்கிய இலக்காக 2025 ஆம் ஆண்டுக்குள் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவைப் பெற வேண்டும் என்பது இருந்தது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களும், தங்களது எட்டு வயதிற்குள் பொருள் புரிந்து படிக்கும் திறனையும், அடிப்படைக் கணித திறன்களையும் பெற்றிருக்க வேண்டும்.

மாணவர்களின் கற்றல் நிலையை அடிப்படையாகக் கொண்டு (level based) ஒருங்கிணைத்து அளிக்கப்பட வேண்டும் என்பதை எண்ணும் எழுத்தும் திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.

இதன் படி தமிழ்நாட்டிலுள்ள 1, 2 மற்றும் 3ஆம் வகுப்புகளில் தமிழ், ஆங்கிலம், கணக்குப் பாடங்கள் சூழ்நிலையியல் பாடக் கருத்துக்களுடன் ஒருங்கிணைந்து கற்பிக்கப்படும்.

இதன் விளைவாக 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வயதிற்குட்பட்ட அனைத்து மாணவர்களும் பொருள் புரிந்து படிப்பர், அடிப்படைக் கணிதச் செயல்பாடுகளை மேற்கொள்வர் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை எண்ணும் எழுத்து குறித்து விளக்கம் அளித்து இருந்தது.

ஒன்று முதல் மூன்றாம் வகுப்புவரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி அளிக்கப்பட்டு, அதற்கான கையேடுகளும் வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்களுக்கு அளிக்கப்படும் இந்த பயிற்சியின்போது, அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் பாடலுக்கு ஏற்றவாறு நடமாடும் வீடியோவை பள்ளிக்கல்வித்துறை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இந்த வீடியோ தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் மிக உற்சாகமாக நடனம் ஆடுவதை பலரும் பாராட்டி வருகின்றனர். இதுபோன்ற ஆசிரியர்கள், மாணவர்களுக்கு நல்ல முறையிலும், எளிமையான முறையில் கற்றுத்தருவார் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.