மும்பையின் தென் பகுதியில் இருக்கும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை அலுவலகத்திற்கு கடந்த இரண்டு நாள்களாக தொடர்ந்து மிரட்டல் போன் கால்கள் வந்துகொண்டிருக்கிறது. போனில் பேசும் நபர் தான் பாகிஸ்தானில் இருந்து பேசுவதாகவும், எனது கடனுக்கு ஒப்புதல் வழங்கவில்லையெனில் எஸ்பிஐ தலைவரை கடத்திச் சென்று கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். அதோடு எஸ்பிஐ வங்கியின் தலைமை அலுவலகத்தையும் தகர்ப்பேன் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இந்த மிரட்டல் தொடர்பாக வங்கி நிர்வாகம் மும்பை மெரைன் டிரைவ் போலீஸில் புகார் செய்துள்ளது. அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கொலை மிரட்டல் விடுத்த நபர் உண்மையிலேயே பாகிஸ்தானில் இருந்து மிரட்டல் விடுத்தாரா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அதேசமயம் இந்த மிரட்டல் சம்பவத்தை தொடர்ந்து எஸ்பிஐ வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருந்து கொண்டு தாவூத் இப்ராகிம் மற்றும் மற்றும் அவனது கூட்டாளிகள் கடத்தல் மற்றும் ஹவாலா பண பரிவர்த்தனை போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர். அவனது ஆட்கள் தென்மும்பையில் அதிகம் பேர் இருக்கின்றனர். அவர்களில் யாருக்காவது எஸ்பிஐ வங்கி கடன் கேட்டு நிராகரிக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வருகின்றனர். கடந்த மாதமும் பாகிஸ்தானில் இருந்து மும்பை போலீஸாருக்கு மிரட்டல் கால்கள் வந்தது. அதில் மும்பையில் இதற்கு முன்பு கடல் வழியாக வந்து தாக்குதல் நடத்தியது போன்ற ஒரு தாக்குதலை மீண்டும் நடத்துவோம் என்று அதில் குறிப்பிட்டப்பட்டது. இதனால் மும்பை முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.