புதுச்சேரி: காங்., ஆட்சியின்போது, சிறப்பு கூறு நிதியில் ஊழல் நடந்துள்ளதாக பா.ஜ., மாநில தலைவர் சாமிநாதன் குற்றம்சாட்டியுள்ளார். அவர், கூறியதாவது; புதுச்சேரியில் கடந்த காங்., ஆட்சியில் ஆதிதிராவிட இன மக்கள் வசிக்கும் 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் நேரடியாக ஆய்வு செய்தோம். அக்கிராமங்களில் சாலை, குடிநீர், மின்சாரம், கழிவறை உள்ளிட்ட வசதிகள் எதையும் நிறைவேற்றவில்லை.
இவையெல்லாம் நிறைவேற்றப்பட்டதாக மத்திய அரசுக்கு தவறான தகவல் அளித்து, முறைகேடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் ஆதிதிராவிட மக்களுக்கு ஒதுக்கப்பட்ட சிறப்பு கூறு நிதி முறையாக பயன்படுத்தப்படாமல் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது.
இது குறித்து ஆதாரங்களுடன் மத்திய உள்துறை அமைச்சரை சந்தித்து விரைவில், சி.பி.ஐ., விசாரணை கேட்டு புகார் அளிக்க உள்ளோம். பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் மத கலவரம், குண்டு வெடிப்பு ஆகியவைகள் இல்லை. திராவிட கொள்கை உள்ளவர்களுக்கு எவ்வாறு தமிழ் முக்கியமோ அதே போல் பா.ஜ., வினருக்கும் தமிழ் தான் முக்கியம். இந்தி திணிப்பு சம்பந்தமாக புதுச்சேரி தி.மு.க., நடத்த உள்ள போராட்டம் தேவையற்றது.
தி.மு.க.,வினர் நடத்தும் பள்ளிகளிலே இந்தி சொல்லிக் கொடுத்துவிட்டு வீதியில் இறங்கி இந்தி எதிர்ப்பு என்று போராட்டம் நடத்துவது நாடகம். புதுச்சேரியில் மதுபான ஆலைகள் வருவதை பா.ஜ., வரவேற்கவில்லை. இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ,கொடுக்கக்கூடிய தொழிற்சாலைகள் வந்தால் வரவேற்போம். இவ்வாறு அவர் கூறினார். பா.ஜ., மாநில பட்டியல் அணி தலைவர் தமிழ்மாறன், துணைத் தலைவர் முருகன் உடனிருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement