“சி.வி.சண்முகத்துக்கும் எனக்கும் இடையே சிண்டு முடியப் பார்க்கிறார்கள்!’’ – கே.பி.முனுசாமி

திமுக எம்.எல்.ஏ-வும் அந்தக் கட்சியின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான கே.பி.முனுசாமி, கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரிடம், ‘‘உங்களுக்கும் சி.வி.சண்முகத்துக்கும் ‘ஈகோ’ பிரச்னை நிலவுவதாகவும், அதனால் எடப்பாடி பழனிசாமியை நீங்கள் சந்திக்கச் செல்லவில்லை என்ற தகவல் உலாவுகிறதே?’’ என்ற கேள்வியை செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ‘“விஷமத்தனமான இந்தக் கேள்விக்கு பதில் சொல்வதற்கே நான் வெட்கப்படுகிறேன். கொள்கைப்பிடிப்புடைய ஒரு தொண்டன் நான். சி.வி.சண்முகம் என்னுடைய தம்பியைப் போன்றவர். அவர் மீது கருத்து வேறுபாடு ஏற்படுவதற்கான எண்ணம் எந்த சூழ்நிலையிலும் எனக்கு வராது.

ஓ.பன்னீர்செல்வம் – எடப்பாடி பழனிசாமி

என்னைப்போலவே உணர்வுள்ள உணர்ச்சிமிக்க தொண்டர் சண்முகம். இந்த இயக்கத்துக்காகவே அர்ப்பணித்துக்கொண்டிருக்கிற குடும்பம் அவரின் குடும்பம். எப்படியாவது, சிண்டு முடித்து இந்த இயக்கத்தினுடைய வேகத்தையும், மீண்டும் ஆட்சி அமைப்பதையும் தடுக்க விஷமிகள் செய்கிற சித்து விளையாட்டு இது. தர்மம், உழைப்பு, சத்தியம், நியாயம் நின்று வெற்றிபெறும். எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் அம்மாவின் தலைமையின்கீழ் பணியாற்றியவர்கள்தான். அதில் மாற்றுக்கருத்துக் கிடையாது.

ஆனால், அம்மா மறைவுக்குப் பின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இடத்தில் இ.பி.எஸ் நன்மதிப்பு பெறுகிறார். ஓ.பி.எஸ் நன்மதிப்பை இழக்கிறார். ‘ஒற்றைத் தலைமை வேண்டும்’ என்று நிர்வாகிகளும், தொண்டர்களும் குரல் எழுப்பியபோது, அதை எதிர்கொண்டிருக்க வேண்டும். அதைவிடுத்து திருக்கோயிலைப்போல பார்க்கப்படும் தலைமைக் கழகத்தை சூறையாடியிருக்கிறார். நிறைய தவறுகளை செய்துவிட்டார். அதனால், ஓ.பன்னீர்செல்வத்தை முழுவதுமாக அப்புறப்படுத்திவிட்டோம்.

கே.பி.முனுசாமி

‘காலம் கடந்து மீண்டும் இணையலாம்’ என்று அவர் சொல்வதை எந்தத் தொண்டனும் ஏற்கவில்லை. ஒரு கட்சி தொண்டர் நீதிமன்றத்துக்கு செல்லக்கூடாது என்பதும் சட்டதிட்ட விதி. ஓ.பி.எஸ் தொடர்ந்து உச்ச நீதிமன்றம் வரை சென்றுகொண்டிருக்கிறார். எந்த தியாகமும் செய்யாமல் பல்வேறு பெரிய பதவிகளை வகித்தவர் அவர். எல்லா வகையிலும் நல்ல நிலையில் இருக்கிறார். அவர் ஒரு சுயநலவாதி. அவரைப்பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. இந்த இயக்கத்துக்கு சசிகலா வேண்டாம் என்று முதலில் குரல் கொடுத்தவன் நான்தான். முடிந்துபோன கதைக்கு முன்னுரை எழுதவேண்டாம். கொள்கைப்பிடிப்போடு எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்றுக்கொண்டிருக்கிறேன்’’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.