ஞானவாபி மசூதி விவகாரம் ஹிந்து அமைப்பு மனு தள்ளுபடி| Dinamalar

வாரணாசி :உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கத்துக்கு, ‘கார்பன் டேட்டிங்’ எனப்படும் கால வயது ஆய்வு செய்யக்கோரிய ஹிந்து அமைப்பின் மனுவை வாரணாசி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு வாரணாசி நகரில் உள்ள ஞானவாபி மசூதியின் பக்கவாட்டு சுவற்றில் உள்ள ஹிந்து தெய்வங்களின் உருவங்களை வழிபட அனுமதிக்க கோரி வழக்கு தொடரப்பட்டது.

இதைத் தொடர்ந்து ஞானவாபி மசூதியில் ஆய்வு செய்ய அனுமதிக்க கோரி வாரணாசி நீதிமன்றத்தில் மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த 2021ல் அனுமதி வழங்கியது.

இந்த ஆய்வில், மசூதிக்குள் தண்ணீர் தேக்கி வைக்கும் இடத்தில் பாரம்பரியம் மிக்க சிவலிங்கம் இருப்பதாக ஹிந்து அமைப்புகள் கூறின.

இதைத் தொடர்ந்து, கடந்த மே மாதம், ஞானவாபி மசூதியை வீடியோ பதிவு செய்ய தடை கோரி மஸ்ஜித் ஜாமியா என்ற முஸ்லிம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.

அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிவலிங்கம் இருப்பதாக கூறப்படும் பகுதியை பாதுகாக்கவும், மசூதியில் முஸ்லிம்கள் வழக்கம்போல தொழுகை நடத்தவும் அனுமதித்து, இந்த வழக்கு விசாரணையை வாரணாசி நீதிமன்றத்துக்கே மாற்றி உத்தரவிட்டது.

இந்நிலையில் ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்பட்ட சிவலிங்கத்திற்கு, ‘கார்பன் டேட்டிங்’ எனப்படும் கால வயது ஆய்வு செய்யக்கோரி ஹிந்து அமைப்பு சார்பில் வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு, நேற்று நீதிபதி ஏ.கே.விஸ்வேஷா முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ”உச்ச நீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை கருத்தில் வைத்தும், பொதுமக்களின் உணர்வுகளை கருத்தில் வைத்தும், சிவலிங்கத்தின் தொன்மையை ஆய்வு செய்ய உத்தரவிட முடியாது,” என உத்தரவிட்ட நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.