ஊத்துக்கோட்டை: தமிழக-ஆந்திர எல்லையில் உள்ள போக்குவரத்து சோதனை சாவடியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனையால் பரபரப்பு நிலவியது. சென்னை – திருப்பதி நெடுஞ்சாலையில், தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள ஊத்துக்கோட்டை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து சோதனைச் சாவடி (ஆர்டிஒ செக்போஸ்ட்) உள்ளது. இதன் வழியாக தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. குறிப்பாக, தமிழகம், ஆந்திரா இடையே ஏராளமான சரக்கு வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு செல்லும் வாகனங்களுக்கு பர்மிட் வழங்குவதற்கு சோதனை சாவடியில் லஞ்சம் பெறப்படுவதாக அடிக்கடி குற்றச்சாட்டு எழுந்தது.
மேலும் இதுசம்பந்தமாக சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை இன்ஸ்பெக்டர் ஜூடியா தலைமையில் ஊழியர்கள் விரைந்தனர். சோதனை சாவடியில் மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சுமார் 7 மணி நேரம் தீவிரமாக சோதனை நடத்தினர். அங்கிருந்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அங்குள்ள ஆவணங்களை சரிபார்த்தபோது மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. மேலும் சோதனை சாவடி கணக்கில் வராத பணம் ரூ53 ஆயிரத்து 400 ரூபாய் மற்றும் முக்கிய ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுசம்பந்தமாக போக்குவரத்து சோதனை சாவடி அதிகாரிகளிடம் லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டனர். ‘’சோதனைச் சாவடி அதிகாரிகள் கைது செய்யப்படுவார்களா அல்லது அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா என்பது முழு விசாரணைக்கு பிறகுதான் தெரியவரும்’ என்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சோதனையில் தமிழக, ஆந்திர எல்லையில் பரபரப்பு நிலவியது.