தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே, 7 ஆம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் அருகே உள்ள அரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு வயது 40. இவர் கேரளாவில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி மாரியம்மாள், கூலி வேலை செய்து வருகிறார். இவர்களது மகன் சீனு (12), அதே ஊரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் ஒரு மேல்நிலைப்பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். மற்றொரு மகன் கணேஷ்குமார், அதே பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று மாரியம்மாள் வழக்கம் போல், கூலி வேலைக்கு புறப்பட்டு சென்றார். மகன்கள் 2 பேரும் பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து புறப்பட்டனர். ஆனால் அதன் பின்னர் வீட்டின் கதவு திறந்து கிடந்தது. இதைக் கண்டு, அக்கம்பக்கத்தினர் சந்தேகித்து வந்து பார்த்தபோது பள்ளி சீருடையுடன் சீனு வீட்டில் மின்விசிறியில் கயிற்றினால் தூக்குப்போட்டு இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து சேர்ந்தமரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சீனு உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் வந்து பள்ளி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தினார். டிஎஸ்பி தெய்வம், கூடுதல் டிஎஸ்பி சார்லஸ் கலைமணி, இன்ஸ்பெக்டர்கள் பாலகிருஷ்ணன், வேல்கனி ஆகியோர் பள்ளியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சேர்ந்தமரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிரச்சனை இல்லாத மனிதன் என உலகில் யாரும் இல்லை. பிரச்சனைகள் வரும்போது அவற்றை தீர்க்க வழிகாண வெண்டுமே தவிர, நம்மை தோர்த்துக்கொள்ள நினைக்கக்கூடாது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது!!
உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும். மாநில உதவிமையம்: 104