புதுடில்லி, தென் மாநில கோவில்களில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் தேவதாசி முறையை ஒழிக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம், ‘நோட்டீஸ்’ அனுப்பி உள்ளது.
தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய தென் மாநிலங்களிலும், மஹாராஷ்டிராவிலும் உள்ள கிராமங்களில், தேவதாசி முறை இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.
இதன் அடிப்படையில், இந்த விவகாரத்தை தேசிய மனித உரிமை ஆணையம் தானாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.
இது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
நாட்டில் பின்பற்றப்பட்டு வந்த பழங்கால பழக்கமான தேவதாசி முறைகள், பல்வேறு சட்டங்கள் வாயிலாக ஒழிக்கப்பட்டன.
ஆனால், தென் மாநிலங்களின் பல்வேறு கிராமங்களில் இன்றும் அந்த நடைமுறை தொடர்வதாக ஊடங்களில் ஆதாரங்களுடன் செய்தி வெளியாகி உள்ளது.
இதில் பெரும்பாலான இளம் பெண்கள் ஏழை எளிய குடும்பத்தையும், பட்டியலினத்தையும் சேர்ந்தவர்களாக உள்ளனர்.
கர்நாடகாவில் மட்டும் 70 ஆயிரம் பெண்கள் தேவதாசிகளாக இருப்பதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.
தமிழகம், கேரளா உள்ளிட்ட ஆறு மாநிலங்கள் மற்றும் மத்திய அரசு, இந்த தேவதாசி முறையை ஒழிக்க எடுத்துள்ள நடவடிக்கை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement