புதுடில்லி:நக்சலைட் அமைப்புடன் தொடர்புடைய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள புதுடில்லி பல்கலை முன்னாள் பேராசிரியர் ஜி.என்.சாய்பாபா, 52, சிறைவாசத்தை தொடரும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுடில்லியில் உள்ள டில்லி பல்கலையின் முன்னாள் பேராசிரியர் சாய்பாபா, நக்சலைட் அமைப்புடனான தொடர்பு குறித்த வழக்கில், 2014ல் கைது செய்யப்பட்டார். மாற்றுத் திறனாளியான இவர், ‘வீல் சேர்’ உதவியுடன் தான் நடமாட முடியும்.
நக்சல் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக, சாய்பாபா உள்ளிட்டோர் மீது, மஹாராஷ்டிரா போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில்,நாட்டுக்கு எதிராக செயல்பட்டதாக சாய்பாபா, ஒரு பத்திரிகையாளர் உட்பட, ஐந்து பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து, 2017 முதல் நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
பயங்கரவாத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
அவரை இந்த வழக்கில் இருந்து விடுவித்து தீர்ப்பளித்த மும்பை உயர் நீதிமன்றம்,உடனடியாக அவரை விடுதலை செய்ய நேற்று முன்தினம் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, மஹாராஷ்டிரா அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
விடுமுறை தினமாக இருந்தபோதும், இந்த வழக்கை நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, பேலா திரிவேதி அமர்வு நேற்று விசாரித்தது.
மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், பேராசிரியர் சாய்பாபா தொடர்ந்து சிறையில் இருக்கும்படி உத்தரவிட்டுள்ளது. வழக்கின் விசாரணை, டிச., 8ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்