தி.மு.க., – எம்.பி., கனிமொழி பேச்சு:
கொரோனாவால், பலரது குடும்ப வருமானம் குறைந்து விட்டது. குடும்ப செலவை குறைக்க வேண்டுமெனில், பஸ்சில் செல்வதை தவிர்க்கலாம் என்ற உணர்வு பெண்களுக்கு தானாகவே ஏற்படுகிறது. அதை உணர்ந்து தான், பெண்கள் பஸ்சில் கட்டணம் இன்றி செல்லும் திட்டத்தை முதல்வர் அறிவித்தார்.
நல்ல திட்டம் தான்… ஆனா, அதையும், ‘ஓசி பஸ்’ என, உங்க அமைச்சர் ஒருத்தர் கேவலப்படுத்திட்டாரே!
அ.தி.மு.க., செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் அறிக்கை:
* ஆட்சியை தொடர்ந்து கட்சியையும் அழித்து, இலை கொண்ட இயக்கத்தை இல்லாது ஒழிக்க, பழனிசாமி துடிக்கிறார். இதனால், இடித்துரைக்கும் எல்லாரையும் நீக்குகிறேன் என்று அதிகார வெறியில், ஆணவத்தில் திளைக்கிறார். கட்சி பொன்விழா ஆண்டுக்குள், கட்சியை குழி தோண்டி புதைப்பேன் என, கர்ஜனைகள் விடுக்கிறார். இதை அடியோடு முறியடிக்க, பன்னீர்செல்வம் வழியில் ஒன்றாகுதல் செய்வோம்.
‘ஆண்ட்ராய்டு’ காலத்துல, இன்னும் அடுக்கு மொழியில அரதபழசா விடுற அறிக்கை, யார் கவனத்தையாவது ஈர்க்குமா?
தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை:
* விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப் படும் நெல்லின் ஈரப்பத அளவை, 22 சதவீதம் வரை தளர்த்த வேண்டும் என, மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியிருக்கிறது. இதில், உள்ள நியாயத்தை மத்திய அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மத்திய அரசு ஏத்துக்கலைன்னா, உடனே டில்லிக்கு போய் ஜந்தர் மந்தர் பகுதியில், போராட்டத்தில் உட்கார போகிறீர்களா, என்ன?
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிக்குமார் அறிக்கை:
* தமிழக அரசு, முதல்வர் மற்றும் தி.மு.க.,வினரை விமர்சிக்க, எதிர்க்கட்சி தலைவருக்கு முழு உரிமை உள்ளது. ஆனால், அவர் அறிக்கையில், தொண்டரடி பொடியாழ்வார் என்ற, வைணவ மத ஆழ்வாரை உதாரணப்படுத்தி பேசுவது கண்டனத்துக்கு உரியது; தேவையற்றது. முன்னாள் முதல்வருக்கு இது மாண்பல்ல.
சரிதானே… இறைவனுக்கு தொண்டு செய்தவரையும், அற்ப மானிடர்களுக்கு சேவகம் செய்பவர்களையும், ஒரே தராசில் வைத்து பார்ப்பதா?
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:
* 2021-ல்- தஞ்சை மல்லிப்பட்டினத்தில், 6 மாத பெண் குழந்தையை தண்ணீரில் மூழ்கடித்து, நரபலி கொடுத்த கொடுமை நடந்தது. நரபலி மட்டுமே மூட நம்பிக்கை அல்ல; பில்லி சூனியம் வைத்தல், பேய் ஓட்டுதல் போன்றவையும் மூட நம்பிக்கை தான். எனவே, வரும் 17-ம் தேதி துவங்கும் தமிழக சட்டசபை கூட்டத்தில், மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். அதுபோல மத்திய அரசும், மூட நம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை கொண்டுவர வேண்டும்.
நம்மூர் அரசியல்வாதிகள் சிலர், ‘அடுத்த தேர்தல்ல எங்க கட்சி ஆட்சியை பிடிக்கும்’னு பேசுறாங்க… அதுவும் கூட மூடநம்பிக்கை கணக்குல சேருமா?
மக்கள் நீதி மய்யம் துணை தலைவர் ஆர்.தங்கவேலு அறிக்கை:
* பழங்குடி மக்களில் சில பிரிவினர், ஜாதி சான்றிதழுக்காக ஆண்டுக்கணக்கில் போராடி வருகின்றனர். இதனால், ஏராளமான மாணவ – மாணவியர், கல்வி, வேலைவாய்ப்பு, அரசின் நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் பரிதவிக்கின்றனர். பழங்குடிகளுக்கு ஜாதிச் சான்றிதழ் கொடுக்கும் அதிகாரம், மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு இருந்தாலும், அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டு, சான்றிதழ்கள் வழங்காமல் காலதாமதம் செய்வதாக தொடர்ந்து புகார்கள் எழுகின்றன.
பழங்குடியினரிடம் பெருசா எதுவும் தேறாதே… அதனால தான், அதிகாரிகள் கண்டுக்க மாட்டேங்கிறாங்க!
அகில இந்திய பாதுகாப்பு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலர், ஸ்ரீகுமார் அறிக்கை:
* ஆவடி படைத்துறை உடைத் தொழிற்சாலை, 62 ஆண்டுகளாக, முப்படைகளுக்கும் தேவையான அனைத்து விதமான சீருடைகளையும் தயாரித்து தருகிறது. இந்த தொழிற்சாலைக்கு போதுமான பணிகள் வழங்க, ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங் வாக்குறுதி அளித்தார். ஆனால், அதை மீறி, 11 லட்சம் புதிய ராணுவ சீருடை கள் தயாரிக்க, தனியாருக்கு, ‘டெண்டர்’ விடப்பட்டுள்ளது. இந்த டெண்டரில் கொடுக்கப் பட்டுள்ள விதிகள், சில பெரிய தனியார் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கின்றன.
முழுக்க முழுக்க மத்திய அரசு கட்டுப்பாட்டில் செயல்படும் நிறுவனமாச்சே… அங்கயும், ‘திராவிட மாடல்’ ஆட்கள் புகுந்துட்டாங்களா, என்ன?
பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை:
* வறுமை காரணமாக, கேரளாவிற்கு சென்று லாட்டரி சீட்டு விற்று வந்த தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பத்மா என்ற பெண் நரபலி தரப்பட்டிருப்பது வேதனை அளிக்கிறது. தர்மபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு இல்லாதது தான், மக்கள் வெளிமாநிலங்களுக்கு செல்ல முதன்மை காரணம். தர்மபுரி மாவட்டத்தில் வேலைவாய்ப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும். கொல்லப்பட்ட பத்மாவின் குடும்பத்திற்கு, 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

கல்வி, வேலை வாய்ப்பில் பின்தங்கிய தர்மபுரி மாவட்டத்தை முன்னேற்ற, இரண்டு திராவிட கட்சிகளும் எதுவும் செய்யாதது தான் இதுபோன்ற வேதனைக்கு காரணம்!
தமிழ்நாடு நாடார் சங்க தலைவர் முத்துரமேஷ், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
* தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், ‘தீபாவளியன்று காலை ஒரு மணி நேரம், மாலை ஒரு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்’ என, கட்டுப்பாடு விதித்துள்ளது. இதனால், பட்டாசு விற்பனை மிகக் குறைவாக நடக்க வாய்ப்புள்ளது. இதை நம்பி உள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்களும், ஆயிரக்கணக்கான வியாபாரிகளும், பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பாதிப்புக்கு உள்ளாவர். எனவே, பட்டாசு வெடிப்பதற்கான நேரக் கட்டுப்பாடை, முதல்வர் ஸ்டாலின் முழுமையாக தளர்த்த வேண்டும்.
வருஷா வருஷம், சம்பிரதாயத்துக்கு தான் இந்த நிபந்தனையை விதிக்கிறாங்க… ஆனா, யாரும் அதை கடைப்பிடிப்பது இல்லையே!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்