பட்டினியால் வாடும் இந்தியா… 107ஆவது இடத்திற்கு வீழ்ச்சி – என்ன சொல்லப்போகிறது மத்திய அரசு?

121 நாடுகளுக்கு இடையே இந்தாண்டு நடதப்பட்ட உலக பட்டினி குறியீடு (GHI) கணக்கெடுப்பில், பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் உள்ளிட்ட நாடுகளை விட பின்தங்கி இந்திய 107ஆவது இடத்தை பிடித்துள்ளது. 

இதில், சீனா, துருக்கி, குவைத் உள்ளிட்ட 17 நாடுகள் குறியீட்டில் முன்னணியில் உள்ளனர். உலக பட்டினி குறியீடு என்பது நாடுகளில் நிலவும் பட்டினி, ஊட்டச்சத்து குறைப்பாடு போன்றவற்றை ஆய்வு செய்து, அதுகுறித்த புள்ளிவிவரங்களை இணையதளத்தில் ஆண்டுதோறும் வெளியிடப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான குறியீட்டு விவரங்களை இன்று வெளியிடப்பட்டுள்ளன.  

அயர்லாந்து நாட்டின் ‘Concern Worldwide’ மற்றும் ஜெர்மன் நாட்டின் ‘Welt Hunger Hilfe’ இந்த அறிக்கையை தயாரித்துள்ளன. மேலும், இந்தியாவின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளன. 

கடந்தாண்டு, 116 நாடுகளுக்கு இடையே நடத்தப்பட்ட இந்த ஆய்வில், இந்தியா 101ஆவது இடத்தை பிடித்திருந்தது. உலக பட்டினி குறியீட்டில், 2000ஆம் ஆண்டில் 38.8 புள்ளிகளுடன் இருந்த இந்தியா, 2014-2022ஆம் ஆண்டு காலகட்டங்களில் 28.2-29.1 புள்ளிகளாக குறைந்துள்ளது. 

மேலும், கடந்தாண்டு இந்த அறிக்கையை இந்திய அரசு அதிர்ச்சிகரமானது என்றும் கள யதார்த்ததிற்கு எதிராக உள்ளதாகவும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தது. மேலும், உலக பட்டினி குறியீட்டை கணக்கிடும் முறை விஞ்ஞானப்பூர்வமாக செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைத்தது. 

மேலும், Gallup எனும் ஆய்வு நிறுவனத்தின் மூலம் தொலைப்பேசி அழைப்புகளில் மக்களிடம் கேள்விகள் எழுப்பி வாக்கெடுப்பு எடுத்து இந்த அறிக்கையை சமர்பித்துள்ளன என்றும் இது கள யதார்த்தத்தை சரியாக பிரதிபலிக்காது எனவும் கடந்தாண்டு இந்தியா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. 

இதைத்தொடர்ந்து, இந்தியாவின் குற்றச்சாட்டை ஏற்க மறுத்த ‘Welt Hunger Hilfe’ நிறுவனம், தாங்கள் Gallup நிறுவனத்தை ஆய்வில் ஈடுபடுத்தவில்லை என்றும் இந்திய அரசு, ஐநா சபையில் சமர்பித்த தரவுகளின் அடிப்படையில்தான் கணக்கீடு செய்யப்பட்டது என தெரிவிக்கப்பட்டது.  

இதுகுறித்து, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில்,”ஊட்டச்சத்து குறைப்பாடு, பட்டினி, குழந்தைகளின் போதுமான வளர்ச்சியின்மை போன்ற உண்மையான பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி எப்போதும்தான் கவனம் செலுத்துவார்?.  

இந்தியாவில் மொத்தம் 22.4 கோடி பேர் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக பட்டினி குறியீட்டில் இந்தியாவின் தரவரிசையில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 121 நாடுகளில் 107 இடத்தை பிடித்துள்ளது” என பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை தாக்கி பதிவிட்டுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.