சென்னை: இயல் இசை நாடக மன்றம் சார்பில், வறுமையில் வாடும் கலைமாமணி விருதாளர்களுக்கு தலா ரூ.1 லட்சம் பொற்கிழி தொகை, 500 கிராமியக் கலைஞர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதியுதவியை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில், இளம் கலைஞர்களை ஊக்குவித்தல், வெளிநாடுகளில் தமிழக கலைகளை பரப்புதல், கலைச்சேவை புரிந்த கலைஞர்களுக்கு மாநில அளவில் கலைமாமணி விருது வழங்குதல், அரிய கலை வடிவங்களை ஆவணப்படுத்துதல், அரிய கலை நூல்களை பதிப்பிக்க நிதியுதவி வழங்குதல், நலிந்த நிலையில் வாழும் மூத்த கலைஞர்களுக்கு மாதம்தோறும் நிதியுதவி வழங்குதல், மறைந்த புகழ்பெற்ற கலைஞர்களின் குடும்பங்களுக்கு குடும்ப பராமரிப்பு நிதியுதவி வழங்குதல் போன்ற பல்வேறு திட்டங்களை இயல், இசை, நாடக வளர்ச்சிக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், ‘கலைமாமணி விருது பெற்றவர்களில், வயோதிக நிலையில், பொருளாதாரத்தில் நலிந்து இன்னலில் இருக்கும் கலைஞர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மூலமாக தற்போது வழங்கப்படும் பொற்கிழி தொகை ரூ.50,000-ல் இருந்து, ரூ.1 லட்சமாக உயர்த்தி 10 கலைஞர்களுக்கு வழங்கப்படும்’ என்று 2021-22-ம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, வறிய நிலையில்உள்ள 10 கலைமாமணி விருதாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதில், கோவை நடராஜன், சாந்தி கணேஷ், எம்.யு.பிரேம்குமார், நா.கருமுத்து தியாகராஜன், பிரசாத் வி.சி.ராஜேந்திரன், ஆ.லெட்சுமி, என்.ஜி.கணேசன், என்.வேலவன் சங்கீதா, வை.இராஜநிதி ஆகிய 9 கலைமாமணி விருதாளர்களுக்கும் பொற்கிழி தொகையான ரூ.1 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நலவாரியத்தில் பதிவுபெற்ற, கிராமியக் கலைகளை போற்றி வளர்க்கும் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் 500 கிராமியக் கலைஞர்களுக்கு இசைக் கருவிகள், ஆடை, அணிகலன்கள் வாங்க தலா ரூ.10 ஆயிரம் என மொத்தம் ரூ.50 லட்சம் வழங்கும் அடையாளமாக, 10 பேருக்கு காசோலைகளையும் முதல்வர் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைர் வாகை சந்திரசேகர், தலைமைச் செயலர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
500 கிராமியக் கலைஞர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் என ரூ.50 லட்சம் வழங்கப்படுகிறது.