கடந்த செப்டம்பரில் சில்லறைப் பணவீக்க விகிதம் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.4 சதவிகிதமாக உயர்ந்திருப்பதைப் பார்த்தால், நமக்கு பெருங்கவலையாக இருக்கிறது. காரணம், விலைவாசி உயர்வானது மற்ற பொருள்களைக் காட்டிலும், உணவுப் பொருள்களுக்கான விலைதான் கடுமையாக அதிகரித்திருக்கிறது.
பொதுவான பொருள்களுக்கான சில்லறைப் பணவீக்க விகிதம் 7.4 சதவிகித மாக உயர்ந்திருக்கும் நிலையில், அதே சில்லறைப் பணவீக்க விகிதம் உணவுப் பொருள்கள் என்று வரும்போது 8.6% அளவுக்கு உயர்ந்துள்ளது. இது கடந்த 22 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகம் என்பதைப் பார்க்கும்போது மலைப் பாகத்தான் இருக்கிறது.
சில்லறைப் பணவீக்கம் விகிதமானது நிதி அமைச்சகம் நிர்ணயித்த 4 சத விகிதத்துக்குள்தான் இருக்க வேண்டும். இந்த ஆண்டு ஜனவரி முதல் தொடர்ந்து மூன்று காலாண்டுகளாக பணவீக்கத்தை 4 சதவிகிதத்துக்குள் வைத்திருக்க ரிசர்வ் வங்கியால் முடியவில்லை. இதற்கான காரணங்களை மத்திய நிதி அமைச்சகத்திடம் எடுத்துச் சொல்ல வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கிறது ரிசர்வ் வங்கி.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் தொடுக்கத் தொடங்கியபோதே வட்டி விகிதத்தை ஓரளவுக்கு உயர்த்தி, பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இதைச் செய்யாமல் விட்டது ரிசர்வ் வங்கியின் தவறா அல்லது அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கைக்கு மத்திய அரசு ஆட்சேபம் தெரிவித்ததா என ரிசர்வ் வங்கி தெளிவுபடுத்த வேண்டும்.
இப்போது பணவீக்கம் பல மடங்கு உயர்ந்த பின்பு, வட்டிகளை மாதம்தோறும் உயர்த்தி வருகிறது ரிசர்வ் வங்கி. கடந்த மே தொடங்கி இப்போது வரை 190 அடிப்படைப் புள்ளிகள் (2 சதவிகிதத்துக்குக் கொஞ்சம் குறைவு) வரை வட்டியை உயர்த்தியுள்ளது. இதனால் வீட்டுக் கடன் தொடங்கி அனைத்து விதமான கடன் களுக்கு வட்டி விகிதம் உயர்ந்து, மக்கள் அதிக அளவில் மாதந்தரத் தவணைத் தொகையைக் கட்ட வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
இதில் அதிர்ச்சி அளிக்கும் முக்கியமான இன்னொரு தகவல், அடுத்தடுத்த மாதங்களில் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தை இன்னும் சில சதவிகிதம் உயர்த்தும் என்பதுதான். அப்படி உயர்த்தினால், ஏற்கெனவே கடன் வாங்கியவர்களின் நிலை இன்னும் மோசமாகும்!
பணவீக்கத்தைக் கையாள்வது கொளுந்துவிட்டு எரியும் தீயை அணைப்பது போன்றது. சரியான நேரத்தில் நடவடிக்கை எடுத்து தீயை அணைக்கத் தவறினால், பெரும் பாதிப்பை நாம் அனுபவிக்க வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட கஷ்டத்தை நாம் இப்போது அனுபவித்து வருகிறோம். இந்தக் கஷ்டத்திலிருந்து மக்களைக் காப்பாற்ற ரிசர்வ் வங்கி இனி எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் சரியாக இருக்கட்டும்! இல்லாவிட்டால், மக்கள் இன்னும் பல இன்னல்களை சந்திக்க வேண்டிய துர்பாக்கியத்துக்கு உள்ளாவார்கள்!
– ஆசிரியர்