அக்னிபத் திட்ட வீரர்களுக்கு சம்பளம் வழங்க வங்கிகளுடன் ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுடெல்லி,

அக்னிபத் திட்டத்தின் கீழ், பதினேழரை வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்கள் 4 ஆண்டுகள் முப்படைகளில் சேர்ந்து பணியாற்றும் திட்டத்தை கடந்த ஜூன் மாதம் 14 மத்திய அரசு அறிவித்தது. அக்னிபத் திட்டத்தின் கீழ் முப்படைகளுக்கும் வீரர்களை சேர்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முதல் தொகுதி அக்னி வீரர்கள் வரும் ஜனவரி மாதம் பயிற்சி மையங்களில் சேருவார்கள் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த திட்டடத்தின் கீழ் சேரும் வீரர்களுக்கு முதல் வருடம் ரூ.30,000 சம்பளம் வழங்கப்படும். 4வது வருடம் அவர்களது சம்பளம் ரூ. 40,000 ஆக இருக்கும்.

இந்நிலையில் அக்னிபத் வீரர்களுக்கு சம்பளம் வழங்க வங்கி வசதிகளை அளிக்கும் விதமாக பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆப் பரோடா, ஐடிபிஐ வங்கி, ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, ஆக்சிஸ் வங்கி, யெஸ் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, ஐடிஎப்சி பர்ஸ்ட் வங்கி, பந்தன் வங்கி ஆகிய 11 வங்கிகளுடன் ராணுவம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் பன்சி போனப்பா தலைமையில் லெப்டினன்ட் ஜெனரல் வி ஸ்ரீஹரி, வங்கிகளின் மூத்த அதிகாரிகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. அக்னிவீரர் சம்பளத் தொகுப்பின் கீழ் வழங்கப்படும் பலன்கள் பாதுகாப்புத்துறை சம்பளத் தொகுப்பைப் போல இருக்கும் என்றும், கூடுதலாக, பணி நிறைவின்போது தொழில் முனைவராக மாற விரும்பும் அக்னிவீரர்களுக்கு வங்கிகள் கடன் உதவி வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.