தானே: மானபங்கம் செய்துவிட்டு கல்லூரி மாணவியை தரதரவென 500 மீட்டர் தூரம் இழுத்துச் சென்ற ஆட்டோ டிரைவர் கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரா மாநிலம், தானே நகரில் நேற்று முன்தினம் காலை 21 வயது கல்லூரி மாணவி, கல்லூரிக்கு சென்றார். அப்போது, சாலை ஓரம் நின்று கொண்டிருந்த 36 வயதான ஆட்டோ டிரைவர் அவரை கிண்டல் செய்தார். உடனே, ‘ஏன் கிண்டல் செய்தாய்?’ என்று மாணவி கேட்டார். இதனால், அவரின் கையை பிடித்து ஆட்டோ டிரைவர் மானபங்கம் செய்தார். பின்னர், ஆட்டோவில் தப்ப முயன்றார்.
உடனே, அவரின் கையை பிடித்து மாணவி தடுக்க முயன்றார். ஆனால், டிரைவர் ஆட்டோவை நிறுத்தாமல், மாணவிரை தரதரவென அரை கிமீ இழுத்து சென்றார். பின்னர், டிரைவரின் கையை மாணவி விட்டார். பின்னர், போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார். அதன் பேரில், வழக்கு பதிவு செய்து விசாரித்த போலீசார், கண்காணிப்பு கேமிராக்களின் பதிவுகளை பார்த்து குற்றவாளியை அடையாளம் கண்டுபிடித்தனர். அவரை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இறுதியில், நவிமும்பையின் திகாவில் அவர் கைது செய்யப்பட்டார்.