அண்மையில் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “இஸ்லாமியப் பெண்களுக்கு சமூகத்தில் கௌரவம் வழங்கப்பட வேண்டுமானால், முத்தலாக் தடைக்குப் பிறகு, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும்” என்று கூறியிருந்தார். அதோடு, “எந்தவொரு முஸ்லிம் ஆணும் மூன்று பெண்களைத் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்பதில் அஸ்ஸாம் அரசு தெளிவாக உள்ளது” என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அதன் தொடர்ச்சியாக, உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவர் சவுகத் அலி, முஸ்லிம்கள் இரண்டு திருமணங்கள் செய்துகொண்டாலும் தங்கள் மனைவிகளை மகிழ்ச்சியாக வைத்திருப்பதாகவும், இந்துக்கள் அப்படியில்லை என்றும் கூறியிருக்கிறார்.

உத்தரப்பிரதேசத்தின் சம்பாலில் நகரில் நடைபெற்ற பேரணியில் பேசிய சவுகத் அலி, “சில நேரங்களில் இந்த மக்கள் எங்களுக்கு நிறையக் குழந்தைகள் இருப்பதாகக் கூறுகிறார்கள். அதேபோல் இரண்டு, மூன்று பேரை நாங்கள் திருமணம் செய்துகொள்கிறோம் என்றும் கூறுகிறார்கள். அவர்களைச் சொல்வதைப்போல நாங்கள் இரண்டு பேரை திருமணம் செய்துகொள்கிறோம் என்பது உண்மைதான். ஆனால், நாங்கள் எங்கள் இரு மனைவிகளையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்கிறோம். சமூகத்திலும் அவர்களுக்கு மரியாதை கொடுக்கிறோம். நீங்களோ(இந்துக்கள்) ஒரு முறை திருமணம் செய்துகொண்டு, மூன்று பேரிடம் தொடர்பில் இருக்கிறீர்கள். இதை யாரிடமும் சொல்வதுமில்லை, உங்கள் மனைவிகளை மதிப்பதுமில்லை. இங்கு அனைத்து குழந்தைகளுக்கும் ஆதார் அட்டை இருக்கிறது. ஆனால், உங்களின் குழந்தைகள் குழப்பத்தை உண்டாக்குகிறார்கள்” என்று கூறினார்.