பிக்பாஸ் வீட்டில் ஜிபி முத்து போனதில் இருந்து ஒரே அலப்பறையாக இருக்கிறது. யூ டியூப் சேனல்களுக்கு அவர், விடுப்பு கொடுத்திருந்தாலும் விஜய் டிவியின் பிக்பாஸ் வீட்டில் களேபரம் செய்து வருகிறார். அவரின் பேச்சு, வெள்ளந்தி குணம் ஆகியவை ரசிகர்களை வெகுவாக ஈர்த்துவிட்டது. அவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் ரசிக்க ரசிகர்கள் கூட்டம் தயாராக இருக்கிறது. அவரை வைத்தே பிக்பாஸ் டீமும் கன்டென்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி ஒரு வாரம் ஆகிவிட்டத்தால், வாரம் இறுதியில் போட்டியாளர்களை சந்தித்துள்ளார் கமல்ஹாசன்.
வழக்கம்போல் ஒருவாரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், டாஸ்குகளில் இருக்கும் நிறை குறைகளை கூறி போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினார். கூடுதலாக ஜிபி முத்துவிடம் அதிக நேரம் உரையாடினார். சனிக்கிழமை எபிசோடில் பாதாம் பருப்பை கையில் கொடுத்து கலகலப்பாக உரையாடிய கமல்ஹாசன், ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் முருங்கை காய் மற்றும் ஜிபி முத்துவின் ஆஸ்தான பொருளான போஸ்ட் பாக்ஸையே கொண்டுவந்து வைத்து உரையாடலை தொடங்குகிறார்.
முதலில் முருங்கை காயை எடுக்கும் ஜிபி முத்து, என்ன சொல்வது என தெரியாமல் விம்மி விம்மி சிரிக்கிறார். அடுத்ததாக போஸ்ட் பாக்ஸ் வருகிறது. அதில் ஜிபி முத்துவுக்கு வரும் லெட்டர் ஒன்றில், சினிமாவில் நடித்தால் எந்த ஹீரோயின் ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற கேள்வி இருக்கிறது. அதற்கு பதில் அளிக்கும் ஜிபி முத்து, நயன்தாரா அல்லது சிம்ரன் ஆகியோரில் யாரேனும் ஒருவர் தனக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவிக்கிறார். இந்த பதிலை கேட்டவுடன் ஹவுஸ்மேட்ஸ் மற்றும் ரசிகர்கள் ஆரவார குரல் எழுப்ப, கமலும் ஆச்சரியமடைகிறார். இப்படியாக இன்றைய முதல் புரோமோ வெளியாகியிருக்கிறது. முழு எபிசோடை பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.