ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இந்து பண்டிட்டை தீவிரவாதிகள் நேற்று சுட்டுக் கொன்றனர். ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை பாதுகாப்பு படைகள் தீவிரப்படுத்தி இருப்பதால், அவர்களால் நாச செயல்களில் முன்பு போல் ஈடுபட முடியவில்லை. இதனால் ஏற்பட்டுள்ள விரக்தியின் காரணமாக, அப்பாவி மக்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்துகின்றனர். குறிப்பாக, இந்து பண்டிட்களையும், வெளிமாநில தொழிலாளர்களையும் குறிைவத்து தாக்குதல் நடத்துகின்றனர். இந்த மக்களிடையே பீதியை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இந்நிலையில், காஷ்மீரில் நேற்றும் ஒரு பண்டிட்டை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர். தெற்கு காஷ்மீர் மாவட்டத்தில் உள்ள சவுதரி கண்ட் பகுதியை சேர்ந்தவர் புரான் கிருஷ்ணன்.
தனது வீட்டில் இருந்து பழத்தோட்டத்துக்கு செல்வதற்காக வெளியே வந்தார். அப்போது அவரை சுற்றிவளைத்த தீவிரவாதிகள், துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் பலத்த காயமடைந்த அவரை, குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் வழியிலேயே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு ‘காஷ்மீர் விடுதலை போராளிகள்’ (கேஎப்எப்) என்று அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. பண்டிட் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு ஆளுநர் சின்கா மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.